கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி புதுக்கோட்டையில் சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்

கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி புதுக்கோட்டையில்  சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்
X
38 ஆண்டுகளுக்கும் மேலாகப்பணிபுரியும் சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர்.

வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

38 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் சத்துணவு ஊழியர்கள் தங்கள் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டையில் மாலை நேர தர்ணா போராட்டத்தை நடத்தினர்.

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பெ.அன்பு தலைமை வகித்தார். நிர்வாகிகள் மகாராஜன், கருணாநிதி, மரியசெல்வம், பிரேமலதா, தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் எஸ்.சீதாலெட்சுமி பேசினார்.

சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ரெங்கசாமி, முதல்நிலை கால்நடை மேற்பார்வையாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் கே.குமரேசன், சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் கு.சத்தி, மாவட்ட துணைத் தலைவர் ஏ.லெட்சுமணன், அறிவியல் இயக்க மாநிலக்குழு உறுப்பினர் அ.மணவாளன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

போராட்டத்தை நிறைவு செய்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அ.மலர்விழி உரையாற்றினார். முன்னதாக மாவட்ட இணைச் செயலாளர் பி.பாண்டியன் வரவேற்றார், பொருளாளர் க.பிச்சைமுத்து நன்றி கூறினார். போராட்டத்தில் ஏராளமான சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர்.

காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்திவிட்டு உரிய கட்டமைப்பு வசதியுடன் சத்துணவு ஊழியர்களிடமே வழங்க வேண்டும். முழுநேர அரசு ஊழியராக அறிவித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் போது அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் பணிக்கொடையாக வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

உணவு மானியத் தொகையை குழந்தை ஒன்றிற்கு ரூ.5 உயர்த்தி வழங்க வேண்டும். சத்துணவு பிரிவிற்கு கணினி ஆப்ரேட்டர் நியமிக்க வேண்டும். எரிவாயு சிலிண்டரை நேரடியாக மையத்திற்க வழங்க வேண்டும். சத்துணவு திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் போக்கை அரசு கைவிட வேண்டும். சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு சம்பளத்துடன் பன்னிரண்டு மாதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன

Tags

Next Story