புதுக்கோட்டைக்கு ரயிலில் வந்த மாவட்ட விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள்
Pudukkottai News Today -புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்கள் இரயிலில் வந்து சேர்ந்தது.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சம்பாசாகுபடிக்கு தேவையான யூரியா உரம் 2108 மெட்ரிக் டன்கள் தூத்துக்குடியில் இருந்து இரயிலில் புதுக்கோட்டை வந்தது என புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்(பொ) மெ.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி பாசன வசதி பெறும் பகுதிகளில் சம்பா சாகுபடி பணியானது ஆகஸ்டு மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, கறம்பக்குடி, திருவரங்குளம் மற்றும் கந்தர்வகோட்டை ஆகிய தாலுகாக்களில் சுமார் 27 ஆயிரத்து 400 ஏக்கர் டெல்டா பாசன பகுதிகளாகும்.இந்த பகுதிகளில் இதுவரை சுமார் 22 ஆயிரத்து 400 ஏக்கர் பரப்பில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் மற்றும் வடகிழக்கு பருவமழையின் மூலம் பெறப்பட உள்ள தண்ணீர் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மத்திய கால ரகங்களை விதைப்பு செய்வது ஏற்றதாகும். இதனால் பயிர் வடகிழக்கு பருவமழையின் தாக்குதலுக்கு உள்ளாகாமல் நல்ல மகசூலை பெற இயலும்.
விவசாயிகளுக்கு வினியோகம் செய்வதற்கு மத்திய கால நெல் ரகங்களான டி.கே.எம்.13, கோ.50, ஏ.டி.டீ39, ஏ.டி.டீ.50, என்.எல்.ஆர்.34449 போன்ற ரகங்களின் சான்று பெற்ற விதைகள் 140.41 மெட்ரிக் டன் அளவு வேளாண்மை விரிவாக்க மையங்களில் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. மேலும் போதுமான மத்திய மற்றும் குறைந்த வயதுடைய ரகங்கள் உரிமம் பெற்ற கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. அரசு வேளாண் விற்பனை மையங்களில் இருப்பில் உள்ள விதைகள் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் (அரிசி) தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், விதை கிராம திட்டம் ஆகியவற்றின் கீழ் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது சம்பாநெல் சாகுபடிபணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சம்பா சாகுபடிக்கு தேவையான யூரியா 4664 மெட்ரிக் டன்கள்,டிஏபி 2053மெட்ரிக் டன்,பொட்டாஷ் 868 மெட்ரிக் டன்,காம்ளக்ஸ் 5011மெட்ரிக் டன்களும் இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவுகடன் சங்க விற்பனை நிலையங்கள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில் தூத்துகுடியிலிருந்து தற்போது கிரிப்கோயூரியா 1323 மெட்ரிக் டன்கள், ஸ்பிக் யூரியா785 மெட்ரிக் டன்கள்,மேலும் டிஏபி 191மெட்ரிக் டன்கள்,காம்ளக்ஸ் 243 மெட்ரிக் டன்கள்;,சூப்பர் 63மெட்ரிக் டன்கள் ஆகியன இரயிலில் புதுக்கோட்டை வந்துசேர்ந்தது .
இது கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை வேளாண் இணை இயக்குநர் மெ.சக்திவேல் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின் போது, தரக்கட்டுபாடு வேளாண்மை உதவி இயக்குநர் மு.மதியழகன், தரக்கட்டுபாடு வேளாண்மை அலுவலர் சி. முகமதுரபி, கிரிப்கோ மற்றும் ஸ்பிக் நிறுவனஅலுவலர்களும் உடனிருந்தனர்.
உரம் தங்குதடையின்றி கிடைத்திடவும், உரியவிலையில் விற்பனை செய்வதை உறுதிப்படுதிடவும்,வேளாண் துறை மூலம் அவ்வப்போது உர ஆய்வாளர்கள் மூலம் அனைத்து வட்டாரங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே மாவட்டத்தில் உள்ளஅனைத்து சில்லரை உர உரிமைதாரர்கள் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-இன் படி உள்ள விதி முறைகளை சரியாக பின்பற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. உரங்களை பிறமாவட்டங்களுக்கு அனுப்பக் கூடாது. உரங்களை, உர மூட்டையின் மேல் காணப்படும் அதிகபட்ச விற்பனை விலைக்குமேல் விற்பனை செய்தாலோ, விற்பனை உரிமத்தில் உரிய அனுமதியின்றி பெறப்பட்ட நிறுவனத்தின் உரங்களையோ,உரிமத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிரவேறு இடத்தில் இருப்பு வைத்து விற்பனை செய்தாலோ உர உரிமம் இரத்து செய்யப்படும் என இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது.
விவசாயிகள் உரம் வாங்கச் செல்லும் போதுதங்கள் சாகுபடிக்கு தேவையான உரங்களை தங்களது ஆதார் எண்ணைப் பயன்படுத்தி பெற்றுக் கொள்வதுடன் ,கட்டாயமாக உரங்களுக்கான ரசீதுகளையும் கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டு மென அறிவுறுத்தப்படுகிறது. எனவே,புதுக்கோட்டை மாவட்ட சில்லரை உர விற்பனையாளர்கள் உரக்கட்டுப் பாட்டு ஆணையின்படி, உர விற்பனை மேற்கொள்ள வேண்டும் எனவும், ஆய்வின் போது குறைபாடுகள் ஏதும் கண்டறியப்பட்டால் உர உரிமம் இரத்து செய்யப்படும் எனவும் புதுக்கோட்டைமாவட்ட வேளாண் இணை இயக்குநர்(பொ) மெ.சக்திவேல் தெரிவித்துள்ளார்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu