தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியத்துடன் உதவி
தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறை மூலம் 2023-24 -ஆம் ஆண்டு தேசிய தோட்டக்கலை இயக்கமானது (MIDH-NHM) மத்திய, மாநில அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் பரப்பு விரிவாக்க இனத்தின் கீழ் வீரிய ஒட்டு காய்கறிகளான மிளகாய் குழித்தட்டு நாற்றுகள் அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் தரமான முறையில் உற்பத்தி செய்யப்பட்டு, நாற்றுகள் மற்றும் இடுபொருட்கள் சேர்த்து ஒரு எக்டருக்கு ரூ.20,000- மதிப்பிலும்,
பழப்பயிர்களில் மா, கொய்யா அடர் நடவுக்கான மா ஒட்டுச்செடிகள், கொய்யா பதியன்கள், பப்பாளி செடிகள், எலுமிச்சை பதியன்கள், அத்தி, நெல்லி, டிராகன் பழ நடவுப் பொருட்கள் மற்றும் பலா ஒட்டு செடிகள் ஆகியவையும் இதற்கான இடுப்பொருட்களும் 40% மானியத்தில் வழங்கப்பட உள்ளன.
மேலும், உதிரி மலர்களான மல்லிகைச்செடிகள், செண்டிப்பூ குழித்தட்டு நாற்றுகள் மற்றும் நறுமணப் பயிர்களான கொத்தமல்லி விதைகள், மிளகு வேர் பிடித்த குச்சிகள் மற்றும் மலைத்தோட்ட பயிரான முந்திரி சாதாரண நடவுக்கான ஒட்டுச்செடிகள் மற்றும் அதற்கான இடுப்பொருட்களும் 40% மானியத்தில் வழங்கப்பட உள்ளன.
விவசாயிகளின் தோட்டத்தில் நீர் சேகரிக்கும் அமைப்பு அமைத்திட ஒரு கன அடிக்கு ரூ.125- வீதம் அதிகபட்சமாக 1200 (20mx20mx3m (300 micron nefpop tpupg நெகிழி விரிப்பு உட்பட) கனஅடி அமைத்திட பின்னேற்பு மானியத்தில் 50% (ரூ.75,000) வழங்கப்பட உள்ளது.
பயிர்களில் நீர் மற்றும் களை மேலாண்மைக்கான நிலப் போர்வைகள் 50% மானியத்திலும், மண்புழு உரம் தயாரிக்க நிரந்தர மண்புழு உரப்படுக்கைக்கான மானியமும் 50% வழங்கப்பட உள்ளன.மகரந்த சேர்க்கையை ஊக்குவித்து மகசூலை அதிகரிக்க தேனீ வளர்ப்புக்கு தேவையான தேனீக்கள், தேனிப்பெட்டிகள் மற்றும் தேன் பிரித்தெடுக்கும் கருவிகள் ஆகியவையும் 40% மானியத்தில் வழங்கப்பட உள்ளன.
மேலும், அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை இனத்தில் தரம் பிரித்தல், சிப்பம் கட்டுதல் போன்ற பணிகளுக்கு தேவைப் படும் சிப்பம் கட்டும் அறை 50% பின்னேற்பு மானியமும் (ரூ.2,00,000-),வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் குறைந்த விலையிலான வெங்காய சேமிப்பு கிடங்கு 50% பின்னேற்பு மானியத்திலும் (ரூ.87,500-) மற்றும் விவசாயிகள் காய்கறிகள் விற்பனைக்கு பயன்படுத்தும் வகையில் நகரும் காய் மற்றும் கனிகள் விற்பனை வண்டி 50% பின்னேற்பு மானியத்திலும் வழங்கப்பட உள்ளன.
மேலும் பண்ணை குறைபாடு நிவர்த்திக்கான இடுப்பொருட் களும் பின்னேற்பு மானியமாக வழங்கப்பட உள்ளன.மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் (KAVIADP) இந்த ஆண்டு 98 பஞ்சாயத்து கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.தேர்வு செய்யப்பட்ட பஞ்சாயத்து கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 80% இலக்கீடு இக்கிராமங்களில் செயல்படுத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகிப் பயன் பெறலாம். திட்டங்களின் பயன்களை பெற விவசாயிகள் https://tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration_new.php என்ற தோட்டக்கலைத் துறை இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தகவல் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu