அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட சிறப்பு முகாம்: ஆட்சியர் ஆய்வு
புதுக்கோட்டை அருகே முள்ளூரில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் நடந்த சிறப்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளூர் ஊராட்சியில், 15.91 ஏக்கர் நிலப்பரப்பில் 26 நபர்களை பயனாளிகளாக கொண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள தரிசு நிலத் தொகுப்பு நிலத்தினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு துவக்கி வைத்தார்.
இம்முகாமில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, விதைச்சான்று மற்றும் அங்க சான்றளிப்புத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, நீர்வள ஆதாரத்துறை, மீன்வளத் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் கைத்தறி, கைவினைப்பொருட்கள், நெசவு மற்றும் காதித்துறை ஆகிய துறைகள் பங்கேற்று, துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் வகையிலும், விவசாய உற்பத்தி திறனை உயர்த்திடும் வகையிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி வேளாண் துறைக்கென தனிநிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கான திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட 497 கிராம ஊராட்சிகளிலும் உள்ள தரிசு நிலங்களில் வேளாண்மை செய்யும் வகையிலும், தரிசு நில உற்பத்தித் திறனை மேம்படுத்திடும் வகையிலும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின்கீழ், தரிசு நில தொகுப்புகளை உருவாக்குதல், தரிசு நில தொகுப்பு நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்தல், ஆழ்துளை கிணற்றுக்கு மின் இணைப்பு, சூரிய ஒளி பம்பு செட் அமைத்தல், தனிநபர் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைத்தல், தனிநபருக்கு பண்ணைக் குட்டை அமைத்தல், சிறுபாசனக் குளம், குட்டை, வரத்துவாரி தூர்வாரி ஆழப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட உள்ளது. எனவே விவசாயிகள் அனைவரும் அரசு செயல்படுத்தும் இதுபோன்ற திட்டப் பணிகளை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் ரூ.3,000 மதிப்பீட்டில் விசை தெளிப்பான், ரூ.400 மதிப்பிலான உழுந்து விதை, மகளிர் திட்டத்தின் சார்பில் 5 குழுக்களுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பிலான சுழல் நிதியையும், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் ரூ.10,000 மதிப்பிலான தாது உப்பு கலவை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் ரூ.300 மதிப்பில் காய்கறி விதைகள் தொகுப்பு என மொத்தம் ரூ. 2,63,700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார், வருவாய் கோட்டாட்சியர்; அபிநயா, வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளர் செல்வம், மாவட்ட இயக்க மேலாண் அலகு திட்ட இயக்குநர் ரேவதி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் மா.உமாமகேஸ்வரி, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் தனலெட்சுமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஸ்ருதி, ஊராட்சிமன்றத் தலைவர் ஆதீஸ்வரன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu