பயிர் பாதிப்புக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: சிபிஎம் வலியுறுத்தல்
பைல் படம்
பயிர் பாதிப்புக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென சிபிஎம் கட்சி வலியுறுத்தல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு தாமதமின்றி இழப்பீடு வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழுக் கூட்டம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.மதியழகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநிலக்குழு முடிவுகளை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் மற்றும் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் வறட்சியினால் சாகுபடிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதில் நெல் விவசாயிகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக ஆவுடையார் கோவில் தாலுகாவில் 2826 ஹெக்டேர், மணமேல்குடி தாலுகாவில் 1786 ஹெக்டேர், அறந்தாங்கி தாலுகாவில் 517 ஹெக்டேர் அளவுக்கு நெல்பயிர்கள் கடும் வறட்சியினால் பாதிப்புக்கு உள்ளானது. பயிர்ப்பாதிப்புகளை அதிகாரிகள் கணக்கீடும் செய்துவிட்டனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் இதுகுறித்து மாநில அரசுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனாலும், இதுவரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே, விவசாயிகளின் பயிர் பாதிப்புக்கு ஏற்ப உரிய இழப்பீட்டை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu