அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி மறுக்கிறார்: அமைச்சர் ரகுபதி
பைல் படம்
அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி மறுத்து வருவதாக சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் வியாழக்கிழமைஅவர் அளித்த பேட்டி: முன்னாள் அமைச்சர்கள் பி.வி. ரமணா, சி விஜயபாஸ்கர் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு தொடர்வது தொடர்பான அனுமதி கோரும் கோப்புகள் கடந்த 2022 செப். 12ஆம் தேதி அரசிடமிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு, சட்டப்படியான விசாரணை நடைபெற்று வருவதாக மழுப்பலான பதிலை ஆளுநர் தந்திருக்கிறார். யார் விசாரணை நடத்துகிறார்கள் என்பதை விளக்க வேண்டும்.
முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது வழக்கு தொடர்வதற்காக முழுமையான கோப்புகள் ஆளுநருக்கு கடந்த 2022 செப். 12ஆம் தேதி அனுப்பியிருக்கிறோம். ஆனால், 'ஆதன்டிகேட்டட் காப்பீஸ்' வரவில்லை என ஆளுநர் மாளிகை தெரிவித்திருக்கிறது. முழுக் கோப்புகளும் அவரிடம் இருக்கிறது.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வழக்கு தொடர்வதற்காக கடந்த 2022 மே 15ஆம் தேதி அரசிடமிருந்து கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எதுவும் வரவில்லை என ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு கூறுகிறது.
ஏன் இவ்வாறு உண்மைக்குப் புறம்பாக செய்திக்குறிப்பை வெளியிடுகிறார்கள் எனத் தெரியவில்லை. உண்மைக்குப் புறம்பான கருத்துகளை ஆளுநர் மாளிகை வெளியிட்டால், பொதுமக்கள் இனி ஆளுநர் மாளிகை அறிவிப்புகளை நம்புவார்களா
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த தற்போது எம்எல்ஏ -க்களாக இருக்கும், முன்னாள் அமைச்சர்கள் மீது பேரவைத் தலைவரிடம் அனுமதி பெற்று வழக்கு தொடர்வதற்கான முன்மொழிவுகளை தலைமைக் குற்றவியல் வழக்குரைஞரிடம் பெற்று மேற்கொள்ள இருக்கிறோம்.
அதிமுக முன்னாள் அமைச்சர்களைக் காப்பாற்றும் வகையிலும், திமுக அரசைப் பழிவாங்கும் வகையிலும் இரட்டை வேடம் போடுகிறார் ஆளுநர். ஆளுநரின் இந்த நடவடிக்கைகளுக்கு எங்கள் முதல்வர் ஸ்டாலின் அஞ்சமாட்டார். பழிவாங்கவும் விடமாட்டார். ஆளுநர் அரசியல் செய்யக் கூடாது எனப் பலரும் சொல்கிறார்கள். அவற்றைக் கேட்டு அவர் திருந்த வேண்டும்.
தெலங்கானா, மேற்கு வங்க மாநிலங்களில் ஏற்கெனவே ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டி ருக்கிறது. எங்கள் முதல்வர் ஸ்டாலின் பொறுமையாக இருக்கிறார். அவரது பொறுமைக்கும் எல்லை உண்டு.இதுவரை ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ பதில் வரவில்லை. பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்ட குறிப்புதான் கிடைத்திருக்கிறது. எனவே, முதல்வரின் ஆலோசனை பெற்று, பதில் கடிதமாகக் கொடுப்பதா அல்லது பத்திரிகைக் குறிப்பாக பதில் அளிப்பதா என்பதை விரைவில் செய்வோம் என்றார் அமைச்சர் ரகுபதி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu