நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க  விவசாயிகள் வலியுறுத்தல்
X

 வெள்ளாளவிடுதி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்   திறக்கப்படாததால் குவிக்கப்பட்டுள்ள  நெல்மணிகள்.

திடீரென இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் இனிமேல் செயல்படாது என அதிகாரிகள் கூறியதால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என விவசாயிகள் கண்ணீருடன் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை.

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாளவிடுதி பகுதியில் 300க்கும் மேற்பட்டோர் விவசாயம் செய்து வருகின்றனர்.கடந்த 15 வருடங்களாக அந்த பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், வெள்ளாளவிடுதி கிராமத்தில் உள்ள விவசாயிகள், தங்கள் நிலத்தில் விளைந்துள்ள நெல்மணிகளை கொண்டு வந்து விற்பனை செய்வது வாடிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில் திடீரென இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் இனிமேல் செயல்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர் .

இதனால், தற்போது அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை நெல் கொள்முதல் நிலையம் எதிரே உள்ள இடத்தில் கொட்டி குவித்து வைத்துள்ளனர். தற்போது இரண்டு வாரங்களாக கொட்டி வைத்திருக்கும் நெல்மணிகளை, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யாததால், தற்போது பெய்து வரும் மழையால் நெல் மணிகள் நனைந்து முளைக்க தொடங்கி உள்ளது.

நகைகளை அடகு வைத்து கடன் வாங்கி அறுவடை பணியில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு அறுவடை முடிந்து விற்பனைக்காக நெல்மணிகளை கொண்டு வந்து கொட்டி வைத்து நெல் கொள்முதல் நிலத்தில் நெல்லை கொள்முதல் செய்யாததால், தற்போது தங்களுடைய வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்படைந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஏற்கெனவே செயல்பட்டு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அதே பகுதியில் செயல்படுத்த வேண்டும்.

அதேபோல் சாகுபடி செய்து சேமித்து வைத்துள்ள நெல் மணிகளை கொள்முதல் செய்ய தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர். உடனடியாக நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து நெல் மணிகளை கொள்முதல் செய்யாவிடில் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்