பல பேரை காப்பாற்றிய அரசு மருத்துவர் பரிதாபமாக நீரில் மூழ்கி சாவு

பல பேரை காப்பாற்றிய அரசு மருத்துவர் பரிதாபமாக நீரில் மூழ்கி சாவு
X

புதுக்கோட்டை துடையூர் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் நேற்று பெய்த மழையில்  தேங்கியிருந்த தண்ணீரில் காரில் வந்த மருத்துவர் சத்தியா நேரல் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுக்கோட்டை துடையூர் பகுதி ரயில்வே மேம்பாலத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி மருத்துவர் சத்தியா பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொம்மாடிமலையிலிருந்து துடையூருக்கு செல்லும் ரயில்வே தரைப்பாலம் மூன்று வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த துடையூர் ரயில்வே மேம்பாலம் பணி மெல்ல மெல்ல நடை பெற்று வந்தது. தற்போது ஆறு மாதங்களுக்கு முன்பு ரயில்வே மேம்பாலம் பணிகள் முடிவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் தொடர்ந்து இந்த ரயில்வே மேம்பாலத்தில் மழைக்காலங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நிற்பதால் துடையூர் பகுதியில் இருந்து புதுக்கோட்டைக்கு மற்றும் திருச்சி செல்லும் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வந்துள்ளது.

இந்த நிலையில் பல்வேறு கட்ட போராட்டங்களில் அப்பகுதியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். ஆனாலும் இந்த பாலத்தை முறையாக சரி செய்யப்படாமல் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டதால் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த தரைப்பாலம் அமைப்பதற்கு அப்பகுதியில் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தும் காவல்துறை மூலம் அவர்களை மிரட்டி அனுமதி வாங்கி பாலத்தை அமைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று 17ம் தேதி இரவு விடிய விடிய பெய்த பலத்த மழையால் தரைப்பாலத்தில் தண்ணீர் அதிக அளவில் தேங்கியிருந்தது. இந்நிலையில் ஓசூரில் பணியாற்றி வரும் மருத்துவர் சத்தியா தனது மாமியாருடன் விடுமுறைக்காக காரில் தனது சொந்த ஊரான துடையூருக்கு இரவில் வந்துள்ளார்.

அப்பொழுது தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வந்ததால் ரயில்வே பாலத்தில் அதிக அளவில் மழை நீர் தேங்கியிருந்த இதனை அறியாத மருத்துவர் சத்யா மழை நீர் குறைவாக உள்ளது என நினைத்து காருடன் பாலத்தில் சென்றுள்ளார். ஆனால் அதிக அளவில் பாலத்தில் மழை நீர் தேங்கி இருந்ததால் காரை இயக்க முடியாமல் காருக்குள்ளே சத்தியா மாட்டிக்கொண்டார்.

அருகில் இருந்த சத்யாவின் மாமியார் காரின் கதவைத் திறந்து நீச்சலடித்து பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார். இந்நிலையில் அருகில் இருந்த பொதுமக்கள் வந்து காருக்குள் இருந்த சத்யாவை மீட்டபோது காருக்குள்ளேயே மூச்சுத்திணறி சத்யா உயிரிழந்துள்ளார். இதன் அடுத்து பொதுமக்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே காருக்குள் தண்ணீர் புகுந்ததால் மூச்சுத் திணறி சத்யா உயிரிழந்துள்ளார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். இதுகுறித்து வெள்ளனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூரில் அரசு மருத்துவமனையில் பல பேரின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவர் சத்யா தனது சொந்த ஊருக்கு வரும்பொழுது பாலத்தில் தேங்கி நின்ற மழை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக இந்த பாலத்தை அகற்றிவிட்டு மீண்டும் மேம்பாலம் கட்டி தரவேண்டும் இல்லையென்றால் மாற்றுப் பாதைகள் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். அதேபோல் இந்த பாலத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் மற்றொரு லாரியும் மூழ்கியுள்ளது லாரி ஓட்டுநர் பொதுமக்களின் உதவியை நாடி கயர் மூலம் பாலத்தின் மீது ஏறி உயிர் தப்பியுள்ளார்.

பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் தற்போது பல்வேறு இடங்களில் விரிசல் விட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்து வருகிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் இந்த பாலம் குறித்து ஆய்வு செய்து பாலம் கட்டிய ஒப்பந்தகாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி உள்ள பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!