குடிநீர் கேட்டு கைக்குழந்தையுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு

குடிநீர் கேட்டு கைக்குழந்தையுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு
X

கீரனூர் பேருந்து நிலையம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

கீரனூரில் குடிநீர் கேட்டு பேருந்து நிலையம் அருகே பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட கீரனூர் பேரூராட்சி பகுதியில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதி மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடி தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வரக்கூடிய நிலையில் 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிதண்ணீர் வருவதாகவும் அப்படி வரக்கூடிய தண்ணீரும் முறையாக வருவதில்லை. எனவே குடிநீரை காசு கொடுத்து வாங்கும் சூழ்நிலை நிலவி வருகிறது. கூலி வேலை செய்யும் பொதுமக்கள் வாரத்திற்கு 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை குடிநீரை காசு கொடுத்து வாங்கி அருந்தும் சூழ்நிலை இருக்கிறது .

இது குறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் இதுநாள் வரை முறையாக குடிநீர் வழங்கவில்லை என்று கூறி விரக்தி அடைந்த அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று கீரனூர் பேருந்து நிலையம் அருகே காலி குடங்களை வைத்து பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கீரனூர் கிள்ளுகோட்டை சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பேரூராட்சி செயல் அலுவலர், வருவாய்துறையினர் மற்றும் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இன்று மாலைக்குள் குடிநீர் பிரச்சினையை சரி செய்து கொடுக்கப்படும் என்றும், அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags

Next Story