குழந்தை திருமணங்களை தடுக்க வேண்டும்: ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்

ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தரராமன் பேசுகிறார் அருகில் நிர்வாகிகள்
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும் குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில குழுக்கூட்டம் நேற்றும் இன்றும் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் நடைபெற்று வருகிறது. கூட்டத்திற்கு, மாநிலத் தலைவர் வாலண்டினா தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளார் சுகந்தி, பொருளாளர் மல்லிகா ஆகியோர் அறிக்கைகள் குறித்து பேசினர்.
சைடு ரைட்ஸ் அண்ட் யூ ஆய்வின்படி கொரோனா காலத்தில் தொடர்ந்து குழந்தைத் திருமணம் அதிகரித்து வருவதாக தெரிய வருகிறது. எனவே, குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில் குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சைடு லைன் திட்டத்தை மாற்றி அமைக்கும் ஒன்றிய அரசின் முடிவை கைவிட வேண்டும். மகளிர் மற்றும குழந்தைகள் நல மேம்பாடு அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாடுகளுக்குள் சைல்ட் லைனை ஒன்றிய அரசு தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.
கொரோனா பெரும்தொற்று காலத்தில் அரசுப்பள்ளி குழந்தைகளின் உணவு பாதுகாப்பு மற்றும் கல்வித் தரத்தை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக ஆன்ட்ராய்டு போன் வழங்க வேண்டும். ரேசன் கடைகளில் பயோ மெட்ரிக் முறையை நீக்குவதோடு, அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் 1500-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு இதனை மறு பரிசீலனை செய்து அருகமைப் பள்ளிகளைத் திறந்து குழந்தைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டும். தற்பொழுது உசிலம்பட்டியில் மூடப்பட்டுள்ள அரசுப் பள்ளியை உடனடியாகத் திறக்க வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிளுக்கும் காவிரி கூட்டுக்குடிநீர்த் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். அனைத்துக் கிராமங்களுக்கும் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அகில இந்திய துணைத் தலைவர்கள் வாசுகி, சுதா சுந்தர்ராமன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் பாலபாரதி (முன்னாள் எம்எல்ஏ), மாநில செயலாளர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், மாநிலக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu