நம்ம தொகுதி உருவான வரலாறு: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி

நம்ம தொகுதி உருவான வரலாறு: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி
X
தொகுதியின் எதிர்பார்ப்புகள் என்ன? தொகுதிக்கு கிடைத்த திட்டங்கள் என்ன? முக்கிய தொழில், மக்களின் வாழ்வாதாரம், அடிப்படை வசதிகள் எப்படி உள்ளது?

1974 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் உதயமானது. மாவட்டதில் 6 சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் கந்தர்வகோட்டை சேர்ந்திருந்தது. 2009 ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பில் கந்தர்வகோட்டை(தனி) தொகுதியாக புதிதாக உருவாக்கப்பட்டது.

கந்தர்வகோட்டை தொகுதியில் கறம்பக்குடி,கீரனூர் ஆகிய 2 பேரூராட்சிகளும், கந்தர்வகோட்டை ஒன்றியம் முழுவதும் கறம்பக்குடி, குன்றாண்டார் கோவிலும், அன்னவாசல் ஒன்றியங்களின் சில ஊராட்சிப் பகுதிகளும் இதில் அடங்கியுள்ளன. தொகுதியில் மொத்தம் 239 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.

வானம் பார்த்த விவசாயப் பகுதியான கந்தர்வகோட்டையில் கிராமங்கள் அதிகமான தொகுதி. நெல்,கடலை,சோளம், கரும்பு உள்ளிட்ட விவசாய பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தாலும் இந்தப் பகுதிக்கு சிறப்பே முந்திரி காடுகள் மட்டுமே.


ஏனென்றால் இங்கு விளையும் முந்திரிக்கு தனி சுவை இருப்பதால் வெளிநாடுகள் வெளிமாநிலங்கள், மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இங்கு விளையும் முந்திரியை போட்டிபோட்டுக் கொண்டு வந்து வியாபாரிகள் வாங்கிச் செல்வதும் முந்திரி ஏற்றுமதி செய்யப்படுவதும் தனிச்சிறப்பாகும்.

தொகுதியின் எதிர்பார்ப்புகள்:

கந்தர்வகோட்டை தொகுதிக்கு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பது அரசு சார்பில் முந்திரி தொழிற்சாலை அமைக்க வேண்டும், மற்றும் ஆர்டிஓ அலுவலகம், காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம், மகளிர் காவல் நிலையம், காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தில் கந்தர்வகோட்டைக்கு வாய்க்கால் அமைத்து காவிரி நீர் கொண்டு வருவது கந்தர்வகோட்டை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்துவது போன்ற பல்வேறு கோரிக்கைகள் உள்ளது.

தொகுதிக்கு கிடைத்துள்ள திட்டங்கள்:

கடந்த10 ஆண்டு அதிமுக ஆட்சியில் கந்தர்வகோட்டை தொகுதியில் அரசு மகளிர் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, புதிய பேருந்து நிலையம், அரசு போக்குவரத்துப் பணிமனை, நீதிமன்றம், மேலும் அரசு அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள கட்டித் தரப்பட்டுள்ளது. இவைகள் கந்தர்வக்கோட்டை தொகுதிக்கு கிடைத்த திட்டங்களாகும்.

ஆனால் கந்தர்வக்கோட்டை தொகுதியில் ரூ2.5 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுளாகியும் பொதுமக்களின் பயன் பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. ஏனென்றால் அப்பகுதியில் சுடுகாடு இருப்பதால் பொதுமக்கள் அந்த புதிய பேருந்து நிலையத்திற்கு செல்வதற்கு அச்சமடைந்து பழைய பேருந்து நிலையத்திலேயே புதிய கட்டிடங்கள் கட்டித் தர வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.

மேலும் தற்போது வரை கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையத்திலேயே இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கந்தர்வக்கோட்டை தொகுதியில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 810 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 241பேரும், திருநங்கைகள் 20 பேர் என மொத்தம் 2 லட்சத்து ஆயிரத்தி 71 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்