மாணவர்களின் நலன் கருதி செப்-1 முதல் பள்ளிகள் திறப்பு: அமைச்சர் சுப்பிரமணியன்

கீரனூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு
தமிழகத்தில் தற்போது தொற்று குறைந்து வருவதன் காரணமாக மாணவர்களின் கல்வி நலன் கருதி செப்டம்பர் 1 முதல் பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக முதல்வர் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்றார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
புதுக்கோட்டை மாவட்டம் , மாத்தூர் கீரனூர் அரசு மருத்துவமனைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தனர்.மேலும் மருத்துவர்களிடமும் சிகிச்சை அளிக்கப்படும் முறை குறித்தும் கேட்டறிந்தனர்
ரோட்டரி கிளப் சார்பில் கீரனூர் மற்றும் மாத்தூர் அரசு மருத்துவமனைகளுக்கு பல்வேறு மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டன அவற்றை மருத்துவரிடம் சுகாதாரத்துறை அமைச்சர் ஒப்படைத்தார்.மேலும் அங்கு தடுப்பூசி போடும் பணியையும் அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மேலும் கூறியதாவது: இந்தியாவிலேயே தமிழகம்தான் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் சுகாதாரத் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து முதல்வர் செயல்பட்டு வருகிறார். .பேரிடர் காலத்தில் முதல்வரின் செயல்பாடு இந்தியாவுக்கு முன்னோடியாக இருந்தது.
கொரோனா காலத்தில் இறந்தவர்களில் 60 சதவீதம் பேர் நீரழிவு நோய், ரத்த அழுத்தம், இதய நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்.அதனை கருத்தில் கொண்டு தான் வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்க கூடாது என்பதற்காக மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு முதல்வர் தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாள்களில் மட்டும் இந்த திட்டத்தின் கீழ் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.எதிர்காலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது தமிழகத்தில் இருக்காது. மூன்றாவது அலை வரக் கூடாது. அப்படி வந்தால் ,தமிழகம் அதனை எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளது.
ஆக்சிஜன் வசதியுடன் ஒரு லட்சம் படுக்கைகள் கூடுதலாக தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில் ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது. எல்லா மாவட்டங்களிலும் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தான் தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.18 வயதில் இருப்பவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு அனுமதி கிடையாது.
தமிழகத்தில் தற்போது தொற்று குறைந்து வருவதன் காரணமாமாணவர்களின் கல்வி நலன் கருதியும் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது முதல்வர் விரைவில் நல்ல முடிவு அறிவிப்பார். கொரோனா தொற்று தற்போது குறைந்து வருவதால் கடந்த 20 நாட்களாக பொது மருத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுமா என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள் என்றார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu