கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்
கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன்
கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர் மெய்யநாதன் தொடக்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று தொடக்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் இன்றையதினம் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளவிடுதி ஊராட்சி, வலச்சேரிபட்டியில் ரூ.7.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், வெள்ளாளவிடுதி ஊராட்சி, தமிழ்நாடு அரசு எண்ணெய்வித்து பண்ணையில் 2,000 பனை விதைகள் நடும் பணியினையும் மற்றும் வெள்ளாளவிடுதி உயர்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாமினையும் துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாமில் சிறப்பு மருத்துவ குழுவினர்களால் பொதுமக்களுக்கு குழந்தை நலம், பல் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, இருதய நோய், சர்க்கரை நோய், புற்றுநோய், காசநோய், மகப்பேறு மருத்துவம், சித்த மருத்துவம், மனநல ஆலோசனை போன்ற பல்வேறு துறைகளின் சார்பில் மருத்துவ உதவிகளுடன் ஆலோசனைகள் வழங்கப்படுவதுடன், நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து மேல் சிகிச்சைக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.
மேலும் மகளிர் அனைவரும் கர்ப்பகாலங்களில் தமிழக அரசின் மருத்துவத் துறையால் வழங்கப்படும் சிகிச்சைகளை முறையாக எடுத்துக்கொண்டு பிரசவ மரணம் மற்றும் சிசு மரணங்களை தவிர்க்க வேண்டும்.இப்பகுதிமக்களின் கோரிக்கைகளை ஏற்று கந்தர்வக்கோட்டையிலிருந்து கறம்பக்குடி செல்லும் சாலையினை இருவழிச் சாலையாக மாற்றவும், வெள்ளாளவிடுதி உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக நிலை உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
இதில் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை , முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லபாண்டியன் அவர்கள், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நிலமெடுப்பு) ஜானகி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார், ஒன்றியக் குழுத் தலைவர் கார்த்திக், ஊராட்சிமன்றத் தலைவர் பரமசிவம் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu