இளம்பெண் இறப்பில் மர்மம்: உடலை தோண்டி எடுத்து அதே இடத்தில் உடற்கூராய்வு
கறம்பக்குடி அருகே இளம்பெண் புதைக்கப்பட்ட இடத்தை மீண்டும் அதிகாரிகள் முன்னிலையில் தோண்டும் பணியில் ஈடுபட்டனர்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கலியராயன்விடுதி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் அவரது உறவுக்கார பெண்ணான மோனிஷா என்பவருக்கும் கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று மோனிஷா தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்திலையில் கடந்த 7ஆம் தேதி மோனிஷா அவரது வீட்டில் இருந்த போது வயிற்று வலியின் காரணமாக இறந்து விட்டதாகவும் அவரது உடலை அடக்கம் செய்து விட்டதாகவும் அவரது உறவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து போலீசார் விசாரணையில் அப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்தது.
இதனிடையே உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் மோனிஷாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அக்கிராமத்தின் விஏஓ சதீஷ்குமார் கறம்பக்குடி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரை பெற்ற போலீசார் அவருக்கு திருமணமாகி பத்து மாதங்களே ஆவதால் இதுகுறித்து புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியருக்கு தகவல் அளித்தனர். இதன் அடிப்படையில் இன்று சம்பந்தப்பட்ட கலியராயன்விடுதி கிராமத்திற்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, மோனிஷாவின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டதோடு மோனிஷாவின் உடலை தோண்டி எடுத்து உடற்கூராய்வு செய்ய உத்தரவிட்டார்.
இதனையடுத்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு மோனிஷா புதைக்கப்பட்ட மயானத்தில் மீண்டும் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூராய்வு நடைபெற்றது. உடற்கூராய்வு முடிந்த பின் அவரது உடல் மீண்டும் அந்த இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை நாளை மறுநாள் கிடைக்கும் என்றும், அதன்பின்பே அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து தெரியவரும் என்றும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது அறிக்கை வந்த பின்பே தெரிய வரும் என்றும் அதன் முடிவை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கோட்டாட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu