நார்த்தாமலை வனப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமும் அருகில் ஆண் சடலமும் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள நார்த்தாமலை தற்காலிக பேருந்து நிலையம் ஒட்டியுள்ள வனப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமும் கீழே கிடந்த ஆண் சடலமும் போலீஸாரால் மீட்கப்பட்டது.

நார்த்தாமலை தற்காலிக பேருந்து நிலையம் ஒட்டியுள்ள வனப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமும் கீழே கிடந்த படி ஆண் சடலமும் கிடப்பதாக அப்பகுதியினர் கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இரு சடலங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இந்த முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த ஆண் சடலம் புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த அப்துல் ஆசாத் என்பதும், பெண் சடலம் வடவாளம் அருகே உள்ள தெற்கு ராயபட்டியைச் சேர்ந்த ராமன் என்பவரது மனைவி கண்ணம்மாள் என்பதும் தெரியவந்துள்ளது.மேலும் சடலமாக கிடந்த கண்ணம்மாளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், கண்ணம்மாளுக்கு நான்கு குழந்தைகள் இருப்பதாகவும், இந்நிலையில் திருமணமான அப்துல் ஆசாத்துடன் கண்ணம்மாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இது நாளடைவில் தகாத உறவாக மாறிவிட்டதாகவும், இது அப்துல் ஆசாத்தின் குடும்பத்திற்கு தெரிந்து, அவர்கள் கண்ணம்மாள் வீட்டிற்குச் சென்று பிரசாணையில் ஈடுபட்டடதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறியதாகவும், தனது கணவர் மற்றும் குழந்தைகளுக்கு அப்துல் ஆசாத்தின் குடும்பத்தினரால் எந்த ஆபத்தும் வரக்கூடாது என்றும் எழுதியுள்ளார்.

இதனையடுத்து போலீசார் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடிதத்தில் கூறியபடி வீட்டை விட்டு வெளியேறிய கண்ணம்மாள் அப்துல் ஆசாத்துடன் வனப்பகுதிக்கு சென்று தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு யாரேனும் இருவரையும் கொலை செய்து விட்டார்களா என்பது குறித்துபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!