இ-நாம் திட்டத்தில் விளைபொருட்க ளை விற்பனை செய்து பயன்பெற அழைப்பு
பைல் படம்
இ-நாம் திட்டத்தில் விளைபொருட்களை விற்பனை செய்து விவசாயிகள் பயன்பெறலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தகவல்.
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இ-நாம் திட்டத்தில் விளைபொருள்களை விற்பனை செய்து பயன் பெறும் வகையில், மத்திய அரசால் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை இணையதளத்தில் ஒருங்கிணைப்பதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக விலை கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி மற்றும் இலுப்பூர் ஆகிய மூன்று ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இ-நாம் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இ-நாம் முறையில் நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் மூலம் ஏல மேற்கொள்ளப்படுவதால் பிற மாவட்டம், பிற ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலிருந்தும் வணிகர்கள் ஏலத்தில் பங்கேற்க முடியும்.
மேலும் துல்லியமான தர அளவுகள் உறுதி செய்யப்படுவதால் விவசாயிகளின் விளைபொருள் களுக்கு அதிக விலை கிடைக்கிறது. இதற்குரிய தொகையும் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இ-நாம் திட்டத்தில் பண்ணை வாயில் (Farmgate) வணிகம் என்ற முறை தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
விளைபொருள்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு எடுத்து வருவதற்கான ஏற்றுக் கூலி, போக்குவரத்து செலவினங்களை முழுமையாக குறைக்கும் நோக்கில் விவசாயிகளின் இருப்பிடம், தோட்டத்திற்கே ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலர்கள் நேரில் சென்று, இ-நாம் செயலி மூலம் விளைப்பொருட்களை விற்பனை செய்து தருகின்றனர். இதற்கான தொகையும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுவதை உறுதி செய்யும் வழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் அருகில் உள்ள விற்பனைக்கூடங்களை அணுகி இ-நாம், பண்ணை வாயில் வணிகம் மூலம் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை விற்பனை செய்து பயன்பெறலாம்.
விற்பனைக்கூட கண்காணிப்பாளர், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் ஆலங்குடி- 8838185053 மற்றும் விற்பனைக்கூட கண்காணிப்பாளர், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அறந்தாங்கி- 8072871220 மற்றும் மேற்பார்வையாளர், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் இலுப்பூர்- 9894862454 ஆகும். மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu