புதுக்கோட்டை மாவட்டத்தில் அக்.10-இல் கொரோனா தடுப்பூசி மெகா முகாம்
பைல்படம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 10.10.2021 (ஞாயிற்றுக்கிழமநை) நடைபெறவுள்ள கோவிட் - 19 மாபெரும் தடுப்பூசி முகாமிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் இன்று (06.10.2021) நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க, புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் -19 நோய் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கோவிட் தடுப்பூசி போடும் பணிகள் தினந்தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் உத்தரவிற்கிணங்க கோவிட் - 19 மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் வருகின்ற 10.10.2021 அன்று மாபெரும் கோவிட் -19 தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளது. இம்முகாமில் பொதுமக்களை அதிக அளவில் கலந்துகொள்ளச் செய்து, தடுப்பூசி செலுத்தும் வகையில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பேரூராட்சித்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. முன்களப்பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் அதிக அளவில் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும், பொதுமக்களை அதிக அளவில் கலந்துகொள்ளச் செய்திட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், வட்டார அளவிலான அலுவலர்கள் தகுந்த முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கோவிட் -19 தடுப்பூசி முகாம்கள் குறித்து பொதுமக்களிடையே அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆட்டோ விளம்பரம் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை கோவிட் தடுப்பூசி செலுத்திகொள்ளாதவர்கள் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்களும், தடுப்பூசி முகாமில் தவறாது கலந்துகொள்ளச் செய்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் கவிதாராமு.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, வருவாய் கோட்டாட்சியர்கள் அபிநயா, தண்டாயுதபாணி, சொர்ணராஜ், துணை இயக்குநர்கள் (சுகாதாரப் பணிகள்) அர்ஜுன்குமார், கலைவாணி, நகராட்சி ஆணையர் நாகராஜன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu