கலையும் இலக்கியமுமே காலம் கடந்தும் வாழ்ந்துகொண்டிருக்கும்:எஸ்.ராமகிருஷ்ணன்

கலையும் இலக்கியமுமே காலம் கடந்தும் வாழ்ந்துகொண்டிருக்கும்:எஸ்.ராமகிருஷ்ணன்
X

புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் பேசுகிறார், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்

இலக்கியத்தைத் தாண்டி, அறிவியல், தத்துவம், சமகால சம்பவங்கள், வரலாறு ஆகியவற்றை படிக்க வேண்டும்.

கலையும் இலக்கியமுமே காலம் கடந்தும் வாழ்ந்துகொண்டிருக்கும் என்றார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷணன். புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் முதல் நாளான வெள்ளிக்கிழமை மாலையில் ‘புத்தகங்களின் கைகள்’ என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை:

உங்கள் வீட்டிலேயே பெற்றோர்களால் புத்தகம் அறிமுகமாகி இருக்கிறது என்றால் நீங்கள் சிறந்த குடும்பத்தில் பிறந்திருக்கிறிர்கள் என்று அர்த்தம். புத்தகங்களளும் கைகளைப் போலத்தான். சில புத்தகங்களின் கைகள் ஓர் ஆசிரியரைப் போல அறிவுரை வழங்கும். சில புத்தகங்களின் கைகள் கலங்கி நிற்கும் நேரங்களில் தோழனைப் போல ஆற்றுப்படுத்தும். சில புத்தகங்களின் கைகள் காதலியைப் போல நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும்.

சில புத்தகங்கள் சாலையைக் கடப்பவனுக்கு வழிகாட்டுவதைப் போல நம்மை வழிநடத்தும். சில புத்தகங்கள் அன்னையின் கருணையைப்போல அரவணைத்துக்கொள்ளும். சில புத்தகங்கள் குழந்தைகளைப் போல காற்றில் எதையோ அசைத்துக் கொண்டே இருக்கும். ஆம், எல்லாப் புத்தகங்களும் கைகளைக் கொண்டிருக்கின்றன. அந்தக் கைகளை நாம் எப்படிப் பற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

மனிதன் கண்டுபிடித்ததிலேயே முக்கியமானது மொழி. அதனைத் தொடர்ந்து எழுத்து என்பது மிக முக்கியமான சாதனை. நமக்கு வள்ளுவன், இளங்கோ, கம்பன், கபிலன் போன்றவர்கள் எப்பன இருந்திருப்பார்கள் என்று தெரியாது. ஆனால், அவர்கள் இப்பொழுதும் எழுத்தால் நம்முடன் நெருக்கமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். கலையும், இலக்கியமுமே காலம் கடந்தும் வாழ்ந்துகொண்டிருக்கும்.

தமிழின் மொத்த இலக்கியங்களுமே பிரிவை மையமாகக் கொண்ட இலக்கியங்கள்தான். நட்பில் ஏதோ ஒன்று பிசகும்போது அது பிரிவுக்கு இட்டுச் செல்கிறது. சிலரின் பிரிவுகள் என்பது பிரிவு அல்ல. அது தற்காலிகமான இடைவெளிதான். மனதளவில் அவர்களுக்கான நெருக்கம் இருந்துகொண்டே இருக்கும். இறந்துபோனவர்களைக்கூட நினைவால் தக்கவைத்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

ஒவ்வொரு தற்கொலையும் விதவிதமாக இருக்கின்றன. பெரும்பாலான தற்கொலைகள் கடனைத் திரூப்பிச் செலுத்த முடியாததால் ஏற்பட்ட அவமானங்களால் நேரிடுகின்றன. இக்கொடுமை காலம் காலமாக நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. தற்கொலைச் செய்திகள் இல்லாத நாளே இல்லை என்ற நிலை உள்ளது.

உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே கடனால் அவமானப்படுத்தப்பட்டு, அதில் இருந்து மீள முடியாத சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. 500 ஆண்டுகளுக்கு முன்பு ஷேக்ஸ்பியர் இதுபற்றி ஒரு நாடகத்தை எழுதியிருக்கிறார். அத்தனை ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அந்தப் படைப்பு இன்றைக்கும் பொருந்துகிறது.

இலக்கியம் நம்முடைய மனதிலுள்ள கசடுகளை நீக்கி, நம்மைத் தூய்மையாக்கும். இலக்கியத்தைத் தாண்டி, அறிவியல், தத்துவம், சமகால சம்பவங்கள், வரலாறு ஆகியவற்றை படிக்க வேண்டும். இவ்வாறு எஸ்.ராமகிருஷ்ணன் பேசினார்.

முன்னதாக, மக்கள் வளர்ச்சியில் விஞ்ஞானிகளின் பங்கு என்ற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.தினகரன் பேசினார். நிகழ்ச்சிக்கு, பேக்கரி மஹராஜ் உரிமையாளர் அருண் சின்னப்பா தலைமை வகித்தார். முன்னதாக அ.மணவாளன் வரவேற்றார். ஈ.பவுனம்மாள் நன்றி கூறினார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!