பாண்டி குளத்தில் உள்ள பனை மரங்களை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆய்வு
அறந்தாங்கி அடுத்த பாண்டி குளத்தில் உள்ள பனை மரங்களை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு பனை விதைகளை நட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், பாண்டிக்குடி கிராமம், பாண்டிக்குளத்தில் உள்ள பனைமரங்களை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், அவர் பேசியதாவது.
தமிழக முதல்வர் வேளாண்மை மற்றும் நீர்வளத்துறை சார்பாக தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்துள்ளார். நிதிநிலை அறிக்கையின்போது அமைச்சர், தமிழ்நாட்டின் தேசிய மரமான பனை மரத்தினை பாதுகாக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, தமிழகத்தில் இந்த ஆண்டு 70 லட்சம் பனை விதைகளை நட்டு, பனை மரங்கள் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும் பனை மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்ற பிறகே பனை மரங்களை வெட்ட முடியும். பனை மரங்களுக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளது. பனை மரங்கள் நிலத்தடி நீரை பாதுகாக்கும். புயலினை தடுக்கும். பனை மரத்தில் இருந்து தயார் செய்யக்கூடிய அனைத்து பொருட்களும் மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கான மிகச் சிறந்த இயற்கை ஆர்கானிக் உணவாகும்.
நான் சட்டசபையில் தெரிவித்தப்படி, பனை மரம் மட்டுமே ஹைபிரிட் செய்யப்படாத ஒரே மரமாகும். ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பெரியாளூர் ஊராட்சி, பாண்டிக்குடி கிராம், பாண்டிகுளத்தில் உள்ள பனைமரப் பூங்கா பாரதியார் இளைஞர் நற்பணிமன்றத்தின் நிர்வாகி திருப்பதி மற்றும் இளைஞர்களுடன் இணைந்து 1984 ஆம் ஆண்டு சுமார் 10 ஆயிரம் பனை மரங்களை இப்பகுதியில் உருவாக்கியுள்ளார்.
தமிழக அரசு சார்பில் இந்த பனைமரப் பூங்கா கண்டறியப்பட்டுள்ளது. இப்பனைமரப் பூங்காவிற்கு வருகின்ற சாலை ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது. பாண்டிக்குளத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, வரத்து வாரிகளை சீரமைத்து, சாலை வசதிகள் போன்றவைகளை சீரமைக்கப்படும்.
இப்பனைமரப் பூங்காவினை அனைவரும் பார்வையிடும் வகையில் உரிய ஏற்பாடு செய்யப்படும். இந்த 10 ஆயிரம் பனைமரங்களில் இருந்து ஒரு லட்சம் எண்ணிக்கையிலான பனை விதைகளை பெற முடியும். இப்பனை விதைகளை ஆலங்குடி தொகுதி முழுவதும் வழங்க வாய்ப்பாக அமைந்துள்ளது.
திருச்செந்தூர், உடன்குடி பகுதியில் பனை மரத்தில் இருந்து தயார் செய்யப்படும் பனை வெல்லம் தயாரிப்பு குறித்த தொழில்நுட்பத்தை இப்பகுதியில் உள்ள விவசாயிகள் அறிந்து பயன்பெறும் வகையில் விவசாயிகள் மற்றும் அலுவலர்களை அங்கு நேரடியாக அனுப்பி பார்வையிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
பின்னர் சுற்றுச்சூழல் துறை அமைச்சர், பாண்டிக்குளத்தில் 14-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ் ரூ.7.18 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள பாண்டிக்குளம் மயான சாலை அமைப்பதற்கான பணியினை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சொர்ணராஜ், அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், அறந்தாங்கி முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் ராஜன், அறந்தாங்கி பனை விவசாயி திருப்பதி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu