அரிமளம் ஒன்றியம் ஏம்பல் கிராமத்தில் இ-நூலகம்: அமைச்சர் ரகுபதி திறப்பு
புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் கிராமத்தில் இ-நூலகத்தைத் தொடக்கி வைக்கிறார், சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி
அரிமளம் ஒன்றியம், ஏம்பல் கிராமத்தில் இ-நூலகத்தை சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், ஏம்பலில் உள்ள நூலகத்தில் இ-நூலகம் மற்றும் புதிதாக கட்டப்பட்ட வாரச்சந்தை கட்டடத்தினை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் எஸ்.ரகுபதி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், ஏம்பல் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வாரச்சந்தை கட்டடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த வாரச்சந்தை ஏற்கெனவே திறந்த வெளியில் செயல்பட்டு வந்தது. தற்பொழுது புதிய கட்டடம் கட்டப்பட்;டுள்ளதால் மழை, வெயில் காலங்களிலும் எவ்வித தடங்களும் இல்லாமல் சந்தை சிறப்பாக செயல்படும்.
ஏம்பல் பகுதி பொதுமக்களுக்கு அரசின் சார்பில் ஏற்கனவே தார்சாலை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. மேலும் ஏற்கெனவே மத்திய இணை அமைச்சராக இருந்த பொழுது இப்பகுதியில் மனுநீதி முகாம் நடத்தப்பட்டு, ஏம்பல் மற்றும் ஆவுடையார்கோவில் பகுதிகளிலும் பொதுமக்களுக்கு அதிக அளவிலான பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. இதேபோன்று ஏம்பல் பகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறும் வகையில் சிப்கோ மற்றும் சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைத்து புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளார்கள். இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய தொழில் துவங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு வங்கி கடன் உதவி, இடம் உள்ளிட்ட தேவையான வசதிகள் ஏற்படுத்தித்தர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறுவதன் மூலம் பொருளாதாரம் முன்னேற்றமடையும்.
இப்பகுதியில், நிறுத்தப்பட்டுள்ள பல்வேறு பேருந்துகளை மீண்டும் இயக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே தமிழக அரசின் இதுபோன்ற நலத்திட்டங்களை பொதுமக்கள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என்றார் அமைச்சர் எஸ். ரகுபதி. பின்னர், ஏம்பலில் நில அளவைத் துறையின் சார்பில் ரூ.17.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட குறுவட்ட அளவர் குடியிருப்பு மற்றும் அலுவலகக் கட்டடத்தினை திறந்து வைத்தார். மேலும் பொது நூலகத்துறையின் சார்பில் ஏம்பல் கிராமத்தில் செயல்படும் ஊர்புற நூலகத்தில் மின் நூலகத்தினையும் தொடங்கி வைத்தார்.
இதில்,அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர்.எஸ்.டி.ராமச்சந்திரன், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நிலமெடுப்பு) ஜானகி, மகளிர் திட்ட இயக்குநர் ரேவதி, நில அளவைத்துறை உதவி இயக்குநர் திரவியசாமி, மாவட்ட நூலக அலுவலர் (பொ) சிவக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உதயம் சண்முகம், ராம.சுப்புராம், ஒன்றிய குழுத் தலைவர் மேகலாமுத்து, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் பொன்.இராமலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, ஊராட்சிமன்றத் தலைவர் கனிமொழி முருகானந்தம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கலைவாணி சுப்பிரமணியன், ஒன்றியக் குழு உறுப்பினர் கணேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu