புதுக்கோட்டை அருகே அரவைக் கொப்பரை கொள்முதல் பணி: அமைச்சர் தொடக்கம்
இராஜேந்திரபுரத்தில் அரவைக் கொப்பரை கொள்முதல் பணியை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடக்கி வைத்தார்
புதுக்கோட்டை மாவட்டம், இராஜேந்திரபுரத்தில் அரவைக் கொப்பரை கொள்முதல் பணியினையும், குளமங்கலம் தெற்கு, கருவன் குடியிருப்பு பகுதியில் பகுதிநேர நியாய விலைக் கடையும் திறந்து வைக்கப்பட்டது
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், இராஜேந்திரபுரத்தில், அரவைக் கொப்பரை கொள்முதல் பணியினை யும், திருவரங்குளம் ஒன்றியம், குளமங்கலம் தெற்கு, கருவன் குடியிருப்பு பகுதியில் பகுதி நேர நியாயவிலைக் கடை திறப்பு விழா மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்களின் முன்னேற்றத்தினை கருத்தில் கொண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் அறந்தாங்கி ஒன்றியம், இராஜேந்திரபுரத்தில், அரவைக் கொப்பரை கொள்முதல் பணியினையும், திருவரங்குளம் ஒன்றியம், குளமங்கலம் தெற்கு, கருவன் குடியிருப்பு பகுதியில் பகுதிநேர நியாயவிலைக் கடையினையும் துவக்கி வைத்தார்கள்.
மத்திய அரசினால் 2023-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையான கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 என்ற விலையில் அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்படும். கொப்பரை கொள்முதல் ஏப்ரல் 2023 முதல் செப்டம்பர் 2023 வரை நடைமுறையில் இருக்கும். புதுக்கோட்டை மாவட்டத்தில் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆலங்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 200 மெடன் அரவை கொப்பரையும், அறந்தாங்கி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 600 மெ.டன் அரவை கொப்பரையும் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் விவசாயிகள் பயனடைய ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தினை அணுகி தங்களது நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும். விவசாயிகளின் கொப்பரைக்கான தொகை நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
மத்திய அரசின் கொள்முதல் நிறுவனமான NAFED நிறுவனம் குறைந்தபட்ச தரத்தினை பரிந்துரைத்துள்ளது. அதன்படி அரவை கொப்பரையின் குறைந்தபட்ச தரம், அயல்பொருட்கள் (1%) பூஞ்சாணம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை 10% (எண்ணிக்கையில்) சுருக்கம் கொண்ட கொப்பரை 10% (எண்ணிக்கையில்) சில்லுகள் 10% (எடையில்) ஈரப்பதம் 6% கொண்டதாக இருக்க வேண்டும். தமிழ்நாடு தென்னை விவசாயிகள் நலனுக்காக மேற்கொண்டுள்ள இந்த கொப்பரை கொள்முதல் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட தென்னை விவசாயிகள் அதிக அளவில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும்.
மேலும் சேந்தன்குடி நகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டில் உள்ள குளமங்கலம் தெற்கு தாய் அங்காடியிலிருந்து பிரிக்கப்பட்டு கருவன் குடியிருப்பு பகுதிநேர அங்காடியானது 103 குடும்ப அட்டைகளுடன் கருவன்குடியிருப்பு பகுதி பொதுமக்களுக்காக செயல்படும். இதன்மூலம் இப்பகுதி மக்கள் நீண்ட தூரம் சென்று அத்தியாவசியப் பொருட்கள் வாங்கி வருவது தவிர்க்கப்பட்டு, தங்களது இல்லங்களுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியும்.
எனவே பொதுமக்களின் நலனுக்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் இத்தகைய மக்கள் நலத் திட்டங்களை அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில், வருவாய் கோட்டாட்சியர் சு.சொர்ணராஜ், ஒன்றியக் குழுத் தலைவர்கள் வள்ளியம்மை தங்கமணி (திருவரங்குளம்), மகேஸ்வரி சண்முகநாதன் (அறந்தாங்கி), வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) சங்கரலெட்சுமி, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் புதுக்கோட்டை விற்பனைக் குழு செயலாளர் மல்லிகா, வேளாண் துணை இயக்குநர் ரவிச்சந்திரன், துணைப் பதிவாளர்கள் சதீஸ்குமார், ஆறுமுக பெருமாள், வட்ட வழங்கல் அலுவலர் பெரியநாயகி, செயலாளர் குபேந்திரன், வேளாண் உதவி இயக்குநர் .பத்மா, ஊராட்சிமன்றத் தலைவர் ரஞ்சித், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu