கூட்டுப்பண்ணைய திட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள்: அமைச்சர் வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், பரவாக்கோட்டையில் கூட்டுப்பண்ணைய திட்ட தொகுப்பு நிதியின்கீழ் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்களை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், பரவாக்கோட்டையில், கூட்டுப்பண்ணைய திட்ட தொகுப்பு நிதியின்கீழ், விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்களை, மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் (19.05.2022) வழங்கினார்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது: விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழநாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் விவசாயிகள் அனைவருக்கும் அனைத்து பயன்களும் பெற்று வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசால் கூட்டுப்பண்ணைய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் 1000 விவசாயிகள் பயனடையும் வகையில் 'கூட்டுப்பண்ணையம் திட்டத்தின்கீழ், குறைந்தப்பட்சம் 20 விவசாயிகளை கொண்டு 5 விவசாய ஆர்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டு, விவசாய ஆர்வலர் குழுக்களின் உறுப்பினர்களான 100 விவசாயிகளைக் கொண்டு உழவர் உற்பத்தியாளர் குழு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இக்குழுக்களுக்கு வேளாண் கருவிகள் விவசாயிகளின் தேவைக்கேற்ப பெற்றுக்கொள்ள ரூ.5. இலட்சம் வரையிலும் நிதியுதவி தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்படுகிறது.
அதன்படி தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை சார்பில், பரவாக்கோட்டை மற்றும் எட்டியத்தளி உழவர் உற்பத்தியாளர் குழுக்களை சேர்ந்த 200 பயனாளிகள் பயன்பெறும் வகையில் ரூ.1 லட்சம் மானிய உதவித்தொகையுடன் கூடிய ரூ.11.36 லட்சம் மதிப்பிலான 2 பவர்டில்லர்கள், ஒரு பவர்வீடர், 5 ரொட்டவேட்டர்கள் இன்றயைதினம் வழங்கப்பட்டுள்ளது.எனவே விவசாயிகள் இந்த வேளாண் உபகரணங்கள் மற்றும் கடனுதவிகளை உரிய முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
முன்னதாக ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சுமதி மெய்யநாதன் வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.9.99 லட்சம் மதிப்பீட்டில் பட்டத்தூரணி படித்துறை கட்டுமானப் பணியினை அமைச்சர் பூமி பூஜை செய்து தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வருவாய் கோட்டாட்சியர் சொர்ணராஜ், தோட்டக்கலை துணை இயக்குநர் குருமணி, உதவி இயக்குநர்கள் கார்த்தி பிரியா, செந்தில்குமார், அறந்தாங்கி ஒன்றியக் குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், ஒன்றியக் குழு உறுப்பினர் சுமதி மெய்யநாதன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu