பொதுப்பாதையை ஆக்கிரமித்ததாகக் கூறி தீக்குளிக்க முயன்ற பெண்
புதுக்கோட்டை அருகே பொதுப் பாதையை ஆக்கிரமித்து விட்டதாக கூறி கைக்குழந்தையுடன் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது
பொதுப் பாதையை ஆக்கிரமித்து விட்டதாக கூறி தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
புதுக்கோட்டை மாவட்ட வல்லத்திராகோட்டை அருகே உள்ள பூமத்தான்பட்டி கிராமத்திற்கு செல்லவும் சத்திரப்பட்டி அழகம்மாள்புரம் பகுதி விவசாயிகள் தங்கள் வயலுக்குச் செல்வதற்கும் 45 ஆண்டுகளாக பொதுப் பாதை ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளனர்.
மேலும் அழகம்மாள் புரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இறந்தவர்களின் சடலத்தையும் இந்த பொது பாதையின் வழியே தான் மயானத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.இந்நிலையில் அந்த பாதையின் அருகே உள்ள ஒரு நிலத்தை கணேசன் என்பவர் வாங்கியதோடு அரசு மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தையும் சேர்த்து அதிகாரிகளுக்கு தெரியாமல் ஊராட்சித் தலைவர் துணையோடு ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆக்கிரமிப்பு செய்த அந்த நபர் தங்கள் பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த போது பாதையையும் அடைத்து விட்டதாகவும், இதனால் தங்கள் வயல்வெளிகளுக்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் இதுகுறித்து கேட்டால் ஊராட்சித் தலைவரும் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பின் நபரும் தங்களை மிரட்டுவதாக குற்றம்சாட்டி பூமத்தான்பட்டி, சத்திரப்பட்டி, அழகம்மாள்புரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் இன்று சம்பந்தப்பட்ட நிலத்தை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அந்த நிலம் போலி பத்திரம் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தங்கள் கிராமத்தை சேர்ந்த சிலரது நிலத்தையும் சேர்த்து அந்த நபர் வாங்கி விட்டதாகவும் குற்றம் சாட்டி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண் ஒருவர் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஆலங்குடி வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் முறையான விசாரணை மேற்கொண்டு இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதாக வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu