மக்கள் தொடர்பு முகாமில் 551 பேருக்கு ரூ.1.05 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

மக்கள் தொடர்பு முகாமில் 551 பேருக்கு  ரூ.1.05 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
X
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், குளந்திரான்பட்டு கிராமத்தில் நடைபெற்ற முகாம் அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்றார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 551 பயனாளிகளுக்கு ரூ.1.05 கோடி மதிப்பீட்டில்பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், குளந்திரான்பட்டு கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் இன்று (13.12.2023) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இம்முகாமில் தமிழக அரசு பல்வேறு அரசுத் துறைகளின் வாயிலாக மேற்கொள்ளப்படும் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்தும், அத்திட்டங்கள் மூலம் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களால் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பொதுசுகாதாரத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.

குளந்திரான்பட்டு கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், வருவாய்த்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில், 551 பயனாளிகளுக்கு ரூ.1,04,90,699 மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பேசியதாவது;

தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் நோக்கத்தில் மாதந்தோறும் ஒரு குக்கிராமத்தை தேர்வு செய்து, மக்கள் தொடர்பு முகாம் நடத்திட அறிவுறுத்தியுள்ளார்கள். அதன்படி இன்றையதினம் கறம்பக்குடி வட்டம், குளந்திரான்பட்டு கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில், தமிழக அரசின் சார்பில் பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அரசின் திட்டங்களை விளக்கும் கண்காட்சி வகையில் அமைக்கப் பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பொதுமக்கள் அனைவரும் பார்வையிட்டு, தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிந்துகொண்டு பயன்பெற வேண்டும்.

மேலும் பொதுமக்கள் அனைவரும் அளிக்கும் மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும். அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களின்கீழ் பயன் பெறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். இம்மனுக்களின் மீது துறை சார்ந்த அலுவலர்களால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தில் கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே பொது மக்கள் அனைவரும் இதுபோன்ற முகாம்கள் மூலமாகதமிழ்நாடு முதலமைச்சரின் மக்கள் நலத் திட்டங்களை அறிந்து கொள்வதுடன், அவற்றின் மூலம் பயன் பெறவும் வேண்டும் என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சிவ.வீ.மெய்யநாதன் பேசினார்.

இந்த மக்கள் தொடர்பு முகாமில், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் , மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, கறம்பக்குடி ஒன்றியக் குழுத் தலைவர் .மாலா ராஜேந்திரதுரை, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மு.செய்யது முகம்மது, மாவட்ட அறங்காவல் குழுத் தலைவர் தவ.பாஞ்சாலன், கறம்பக்குடி அட்மா தலைவர் முத்துகிருஷ்ணன், வட்டாட்சியர் நாகநாதன், ஊராட்சிமன்றத் தலைவர் வீரப்பன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!