புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு  ஜல்லிக்கட்டு போட்டி
X

புதுக்கோட்டை மாவட்டத்தின் நான்காவது ஜல்லிக்கட்டு போட்டி ரெகுநாதபுரத்தில்  நடைபெற்றது

ஜல்லிக்கட்டை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பொங்கல் விழாவை முன்னிட்டு நான்காவது ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

தமிழகத்திலேயே அதிக வாடிவாசலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் தொடர்ந்து பல வருடங்களாக ஜல்லிக்கட்டு போட்டியை புதுக்கோட்டை மாவட்டத்தில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி தஞ்சங்குறிசியில் நடைபெற்றது.இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி, மஞ்சுவிரட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள ரெகுநாதபுரத்தில் மாவட்டத்தின் நான்காவது ஜல்லிக்கட்டு இன்று காலை ‌ 8 மணிக்கு தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை, விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கர், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே. செல்லபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 750 காளைகளும் 300 வீரர்களும் பங்கேற்ற இந்த ஜல்லிகட்டு 4 சுற்றுகளாக நடத்தப்பட்டது.

வாடிவாசலில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்க்கப்படும் காளைகள் துள்ளி குதித்து சீறிப் பாய்ந்து வருவதை மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டி தழுவி அடக்கினர். இந்த ஜல்லிக்கட்டில் சிறந்த முறையில் காளைகளை தழுவிய காளையர்களுக்கும் நீண்ட நேரம் வீரர்களை திணறடித்து களமாடும் காளைகளுக்கும் சைக்கிள், எல்இடி டிவி, கட்டில், அண்டா, பேன், மிக்சி, கிரைண்டர், குக்கர், சில்வர் பாத்திரம், தங்க நாணயம், வெள்ளிகாசு உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.

காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே வாடிவாசலுக்கு அனுமதிக்கப்பட்டது. அதேபோல் மாடு பிடி வீரர்களும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags

Next Story