ரூ.1.49 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்டப் பணிகள்: அமைச்சர் தொடக்கம்

ரூ.1.49 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்டப் பணிகள்: அமைச்சர் தொடக்கம்
X

திருவரங்குளம் ஒன்றியம், சூரன்விடுதி கிராமத்திற்குட்பட்ட பகுதிகளில் நிலவும் குறைந்த மின் அழுத்தத்தை சரிசெய்யும் வகையில், ரூ.6,35,350 இலட்சம் செலவில் புதிய மின்மாற்றியினை அமைச்சர் மெய்யநாதன் தொடக்கி வைத்தார்

அறந்தாங்கி மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ரூ.1.49 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடக்கி வைத்தார்.

அதன்படி அறந்தாங்கி ஒன்றியம், சிட்டங்காடு ஊராட்சி, கரிசக்காடு பகுதியில், மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் பகுதிநேர அங்காடி கட்டடப் பணி, காயக்காடு பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி.

மேற்பனைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டும் பணி மற்றும் திருவரங்குளம் ஒன்றியம், கொத்தமங்கலம் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ், ரூ.64 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள், சுண்டாங்கிவலசை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டடப் பணி, சிதம்பரவிடுதி சங்கிலி கருப்பர் கோவிலுக்கு ரூ.12 இலட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டும் பணி என மொத்தம் ரூ.143 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர்சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். மேலும், அறந்தாங்கி ஒன்றியம், இராஜேந்திரபுரம் ஊராட்சி, குருந்திராக்கோட்டையில் குருங்காடு அமைக்கும் இடத்தையும் நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது: முத்தமிழறிஞர் கலைஞர் 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையுள்ள ஆட்சி காலத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இத்திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் சாலைவசதி, குடிநீர்வசதி, மின்விளக்கு வசதி, நூலகம் போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு, அத்திட்டம் சிறப்பாக செயல்பட்டது. தமிழக முதல்வர் இத்திட்டத்தினை தற்போது மீண்டும் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் பல்வேறு பணிகள் அடிக்கல்நாட்டி துவக்கி வைக்கப்பட்டது.

முதலமைச்சரின் 10 அம்ச கோரிக்கையின்படி, முதல் கோரிக்கையாக காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்துடன் இப்பகுதியில் உள்ள அம்புலியாறு, அக்னியாறு, வெள்ளாறுகள் இணைப்பது குறித்தும், கொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணிநேரமும் செயல்படவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் அரசின் நிதிநிலையினை மீட்டெடுத்து, தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார்ள். அதன்படி இப்பகுதி பொதுமக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஆலங்குடி பகுதியில் உள்ள ஏழை, எளிய மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில வேண்டும் என்ற அடிப்படையில், புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பதற்கு முதல்வரிடம் வைக்கப்பட்ட கோரிக்கையின்படி, உடனடியாக ஆலங்குடியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை அறிவித்தார்ள். அதன்படி ரூ.16 கோடி மதிப்பீட்டில் கல்லூரிக்கான புதிய கட்டடங்கள் விரைவில் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

பெண்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டப் பணிகளை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில், கொரோனா நிதியுதவித் தொகை வழங்கம் திட்டம், மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம், மகளிர் சுயஉதவிக் குழுவினர்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்கள். மேலும் முத்தமிழறிஞர் கலைஞரின் திருமண நிதியுதவித் திட்டத்தினை மேம்படுத்தி, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகள், உயர் கல்வி பயில்வதற்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் 'புதுமைப்பெண்" திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார். எனவே பொதுமக்கள் அனைவரும் இத்தகைய அரசின் நலத்திட்ட உதவிகளை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

பின்னர், திருவரங்குளம் ஒன்றியம், சூரன்விடுதி கிராமத்திற்குட்பட்ட பகுதிகளில் நிலவும் குறைந்த மின் அழுத்தத்தை சரிசெய்யும் வகையில், ரூ.6,35,350 இலட்சம் செலவில் புதிய மின்மாற்றியினை அமைச்சர் தொடக்கி வைத்தார். இதன் மூலம் இப்பகுதியில் உள்ள சுமார் 120 குடும்பங்கள் மற்றும் கடைகள் பயன்பெறும்.

இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன் (புதுக்கோட்டை), சு.சொர்ணராஜ் (அறந்தாங்கி), திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், ஆலங்குடி மின்வாரிய செயற்பொறியாளர் நடராஜன், மாவட்ட கல்வி அலுவலர் ராஜாராம், வட்டாட்சியர்கள் செந்தில்நாயகி, பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோகுலகிருஷ்ணன், ஆயிஷாராணி உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்;

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!