அரசின் வளர்ச்சிப் பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மெர்சி ரம்யா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் பணி முன்னேற்றம் குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி, கைகுறிச்சி ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 15-ஆவது நிதி குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.49,000 மதிப்பீட்டில் சமையற்கூடம் புனரமைக்கும் பணிகளையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் கலையரங்கத்தின் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, பூவரசகுடி ஊராட்சி, சத்திரப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்காக கட்டப்பட்டு வரும் சமையற் கூடத்தினையும்,
வல்லத்திராக்கோட்டை ஊராட்சி, தர்மர்கோவில் அருகில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6,20,000 மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நெற்களம் கட்டுமானப் பணியினையும், மாஞ்சான்விடுதி ஊராட்சி, பாப்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கட்டும் பணிகளையும் ஆய்வு செய்து, பணிகளை உயர்ந்த தரத்தில் உரிய காலத்திற்குள் நிறைவு செய்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, மாவட்ட ஆட்சித் தலைவர் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் வல்லத்திராக்கோட்டை ஊராட்சி, கிட்டக்காடு மற்றும் வம்பன் 4 ரோடு ஆகிய பகுதிகளில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்தவர்களின் இல்லங்க ளுக்கு நேரடியாகச் சென்று, விண்ணப்பத்தின் உண்மைத் தன்மை குறித்து களஆய்வு செய்யும் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் மேற்பார்வையிட்டார்.
இந்த ஆய்வுகளின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர்எஸ்.பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்ஆயிஷாராணி, கோகுலகிருஷ்ணன், வட்டாட்சியர் விஸ்வநாதன், உதவிப் பொறியாளர் யோகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu