ஆலங்குடியில் ரூ.1.75 கோடியில் நவீன வசதிகளுடன் நூலகம்: அமைச்சர் மெய்யநாதன்
புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் பேசுகிறார், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நவீன வசதிகளுடன் ரூ.1.75 கோடியில் நூலகம் அமையவுள்ளதாக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை 6-ஆவது புத்தகத்திருவிழாவில் சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய அவர் மேலும் தெரிவித்தது: கல்வியால், பகுதறிவால் முன்னேறிய மாநிலம் தமிழ்நாடு. அறிஞர் அண்ணா நூற்றாண்டையொட்டி சென்னையில் மிகப்பெரிய நூலகத்தை கலைஞர் அமைத்தார். அதே போல கலைஞர் நூற்றாண்டையொட்டி மதுரையில் ரூ.250 கோடி செலவில் பிரமாண்டமான நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். அறிவுச் சமூகத்தைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
மதப்பரப்புரையோடு மருத்துப்பணியாற்ற வந்த ஒரு மருத்துவரின் மகள், இந்த நாட்டில் மருத்துவச் சேவையின் தேவையை உணர்ந்தார். அமெரிக்கா சென்று மருத்துவம் படித்து மீண்டும் இந்தியா திரும்பினார். இங்கே பிரமாண்டமான மருத்துவமனை உருவாக்கி பல்லாயிரக்கண்கான ஏழைகளுக்கு மருத்துவ வசதி கிடைக்க ஏற்பாடு செய்தார். அதுதான் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனை. தனக்காக சொத்து சேர்க்காமல் பொது மக்களுக்காக பயன்படுத்துபவரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.
ரஷ்யப் புரட்சியாளர் லெனினை ஒருவர் சுட்டுக்கொலை செய்ய முயன்று தோற்றுப்போனர். அவருக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று மற்றவர்கள் கூறும்போது, லெனில் அவன் கையில் புத்தகத்தை கொடுக்கச் சொன்னார். சாதி, மதகங்களைக் கடந்து மனிதர்களை நேசிப்பதற்கு தரமான புத்தகங்கள் உதவும். ஒவ்வொரு குழந்தைகளின் கையில் செல்போனைக் கொடுப்பதைவிட புத்தகத்தைக் கொடுக்க வேண்டும்.
எனது தொகுதியான ஆலங்குடி ரூ. 1.75 கோடியில் நவீன வசதிகளுடன் நூலகத்தை உருவாக்கும் பணிகளைத் தொடங்கியிருக்கிறோம். அது நூலமாக மட்டுமல்லாமல், போட்டித் தேர்வை எதிர்கொள்ளவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மையமாகவும் விளங்கும் என்றார் அமைச்சர் மெய்யநாதழ்.
நிகழ்ச்சிக்கு ஸ்ரீபாரதி கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன் தலைமை வகித்தார். ‘சந்திரன் மேல குடிபோகும் காலம்’ என்ற தலைப்பில் புதுதில்லி விஞ்ஞான் பிரச்சாரின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் உரையாற்றினார். கவிச்சுடர் கவிதைப்பித்தன் தலைமையில் தஞ்சை இனியன், வல்லம் ராஜூப்பால், அறந்தை வெங்கடேசன், மு.பா, வீ.மா இளங்கோவன் ஆகியோர் பங்கேற்ற கவிரங்கம் நடைபெற்றது. முன்னதாக அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் ம.வீரமுத்து வரவேற்றார். இணைச் செயலாளர் ஆர்.பிச்சைமுத்து நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu