திருவொற்றியூரில் நிலவும் குடிநீர் தட்டுபாட்டினால் பொதுமக்கள் கடும் அவதி

திருவொற்றியூரில் நிலவும் குடிநீர் தட்டுபாட்டினால் பொதுமக்கள் கடும் அவதி
X

பைல் படம்

தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநகராட்சி மண்டலக் குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார்

திருவொற்றியூரில் நிலவும் குடிநீர் தட்டுபாட்டினால் பொதுமக்கள் கடும் அவதி:மண்டலக் குழு கூட்டத்தில் சரமாரி புகார்

சென்னை திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இப்பிரச்னையைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி மண்டலக் குழு கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் சரமாரி புகார் தெரிவித்தனர்

சென்னை மாநகராட்சி திருவெற்றியூர் மண்டல குழு மாதாந்திரக் கூட்டம் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மண்டல அலுவலர் நவேந்திரன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் எம்.எஸ்.திரவியம் (காங்கிரஸ்), ஆர். ஜெயராமன் (மார்க்சிஸ்ட்) ஆகியோர் பேசும்போது, திருவொற்றியூர், கத்திவாக்கம் பகுதியில் உள்ள 14 வார்டுகளிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு கடந்த ஒரு வாரமாக இருந்து வருகிறது. மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் செயல்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக குழாய் மூலம் குடிநீர் வழங்குவது அடியோடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுதான் இப்பிரச்னைக்கு மூல காரணம் ஆகும். குடிநீர் தட்டுப்பாட்டினால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

பராமரிப்பு பணியின் போது குடிநீர் வழங்குவதில் தடை ஏற்படும் என்பது தெரிந்தும் அதற்கான மாற்று ஏற்பாடுகளை அதிகாரிகள் முறையாக செய்திடவில்லை. பராமரிப்பு பணிகள் சுமார் மூன்று மாத காலத்திற்கு நடைபெறும் என்று கூறப்படும் நிலையில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்க சென்னை குடிநீர் வாரியம் உடனடியாக நடவடிக்கைக எடுக்க வேண்டும் என்றனர்.

வருகைப் பதிவில் முறைகேடு:

கே கார்த்திக் (அ.தி.மு.க.) பேசுகையில், தனியார் துப்புரவு பணியாளர்கள் வருகை பதிவேட்டில் முறைகேடு நடைபெறுகிறது. வேலைக்கு வருகை தராத ஊழியர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு சம்பளம் முழுமையாக வழங்கப்படுகிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றார். தி.மு.க உறுப்பினர்கள் கவி.கணேசன், கே.பி.சொக்கலிங்கம் ஆகியோர் பேசும்போது, அதிகாரிகளில் பெரும்பாலானோர் மிகச் சிறப்பாக செயல்படுவதால் தான் இந்த மண்டலத்தில் பொதுமக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வருகிறது எனவே ஒரு சில அதிகாரிகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு தொடர்ந்து குறை சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது என்றனர்.

மூன்று இடங்களில் நீர்த்தேக்கத் தொட்டி:

உறுப்பினர்களின் விவாதங்களுக்கு பதில் அளித்த மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு,

கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணி காரணமாகவே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. திருவொற்றியூர் பகுதிக்கு நாளொன்றுக்கு சுமார் 2 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவையாக உள்ளது. ஆனால் ஒரு மில்லியன் லிட்டர் குடிநீரை சேமிக்கும் அளவுக்குத் தான் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே மேலும் மூன்று இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டிகளை அமைக்க சென்னை குடிநீர் வாரியத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குழாய் மூலம் குடிநீர் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் இதற்கு மாற்றாக பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் கூடுதல் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகத்தை சீர்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தனியரசு.கூட்டத்தில் சுமார் ரூ.3 .50 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் 71 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு