அரசு கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி - உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றம்
அரசு கட்டிடங்கள், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் அமைக்க உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குனர் தாக்கல் செய்த பதில் மனுவில், "தமிழ்நாடு முழுவதும் உள்ள 49,500 அரசு கட்டிடங்களில் 26,769 கட்டிடங்களில் நுழைவு வாயில்களில் சாய்தளம் மற்றும் கைப்பிடி அமைக்கப்பட்டுள்ளது.21,063 கட்டிடங்களில் மாற்றுத் திறானாளிகள் செல்லக்கூடிய வகையில் வாகன வசதிகள், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், 1,029 கட்டிடங்களில் பிரெய்லி முறையில் லிப்டுகள் அமைக்கபட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும் 54 விழுக்காடு மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2017ஆம் ஆண்டு கொண்டுவருவதற்கு முன்பு உள்ள 45 விழுக்காடு கட்டிடங்களைபொறுத்தவரை, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவண்ணம் வசதிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. சட்டத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனையின்படி, அனைத்து பணிகளும் 2022 ஜூன் 15ஆம் தேதிக்குள் நிறைவடையும்" என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று(செப். 13) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் முத்துகுமார், அனைத்து அரசு கட்டிடங்களிலும், அடுத்த ஆண்டிற்குள் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கபட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டில் மாற்றுதிறனாளிகள் அணுக முடியாத அளவிற்கு எந்த அரசு கட்டடங்களும் இருக்காது என்றும் உறுதியளித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வசதிகளை அடுத்த ஆண்டிற்கு ஏற்படுத்தவேண்டும், தவறினால் சம்மந்தபட்ட துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி வரும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu