சேலம் அருகே ஓமலூரில் தனியார் பள்ளி மாணவிக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை

சேலம் அருகே ஓமலூரில் தனியார் பள்ளி மாணவிக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை
X

மாணவிக்கு பாலியல் தொல்லை (மாதிரி படம்)

சேலம் மாவட்டம் ஓமலூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் விஜயகுமார். இவர் மேட்டூர் அருகே 4ரோடு பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் ஆவார்.

ஓமலூர் தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயகுமார் பல மாணவிகளுக்கு பல ஆண்டுகளாகவே பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், மாணவிகள் பயந்துகொண்டு இவரது சில்மிஷங்களை பள்ளி நிர்வாகத்திடமும் பெற்றோரிடம் கூறவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. வெளியில் யாரிடமும் கூறினால் இன்டர்னல் மதிப்பெண்ணை குறைத்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆனால், தற்போது ஒரு மாணவி தைரியமாக தலைமை ஆசிரியரின் பாலியல் அத்துமீறல்களை அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் வெகுண்டெழுந்த தற்போதைய மாணவிகளின் பெற்றோர் மற்றும் பழைய மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகை இட்டனர்.

தகவல் அறிந்த ஓமலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சங்கீதா, மகளிர் காவல்துறையினர், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் மாணவியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தலைமை ஆசிரியர் விஜயகுமார் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என தெரிய வந்தது.

அதையடுத்து தலைமை ஆசிரியர் விஜயகுமாரை கைது செய்த போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டிய ஆசிரியர்கள் இப்படி தடம்மாறி தங்களது ஆசிரியர்ப்பணிக்கான கவுரவத்தை சீர்குலைப்பது வேதனைக்குரியது. நல்லாசிரியர்களுக்கும் மனவேதனை அளிக்கும் செயல் ஆகும்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!