மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வை கிண்டலடித்து போஸ்டர்

மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வை கிண்டலடித்து   போஸ்டர்
X

அதிமுக முன்னாள் அமைச்சரை கிண்டலடித்து மதுரையில் பாஜகவினர் ஒட்டிய போஸ்டர்

பாஜக- அதிமுகவுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்படுத்தும் வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அரசியல் கோமாளி! தெர்மாகோல் விஞ்ஞானி.. செல்லூர் ராஜூவை கலாய்த்து போஸ்டர் ஒட்டி மீண்டும் அதிமுக-பாஜக இடையேயான மோதல் தொடங்கியுள்ளது.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை அரசியல் கோமாளி என்றெல்லாம் விமர்சித்து மதுரையில் பாஜகவினர் போஸ்டர் ஓட்டியுள்ளனர். மதுரையில் பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் அதிமுக- பாஜக கூட்டணிக்குள் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.எங்களின் மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சிக்கும் தகுதியில்லாத "அரசியல் கோமாளியே ! தெர்மாகோல் விஞ்ஞானியே! உங்களை வன்மையாக கண்டிக்கிறோம்.. என்ற வாசகங்களுடன் செல்லூர் ராஜூவை விமர்சித்து நோட்டீஸ்கள் மதுரை மாநகரில் பாஜக நிர்வாகிகள் தரப்பில் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் மதுரை அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக-பாஜக மோதல் பின்னணி...

கூட்டணியில் உள்ள மாநில தலைவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் அளவுக்குச் சென்றிருக்கிறது அ.தி.மு.க.உடனடியாக பத்திரிகையாளர் சந்திப்பை வைத்து பதிலடி கொடுக்கிறது பா.ஜ.க.

கூட்டணிக் கட்சிகளான அ.தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கெனவே அ.தி.மு.கவிற்கும் பா.ஜ.கவிற்கும் இடையிலான உறவு அவ்வளவு நெருக்கமானதாக இல்லாத நிலையில், சமீபத்தில் ஓர் ஆங்கில நாளிதழுக்கு பா.ஜ.கவின் மாநில தலைவர் கே. அண்ணாமலை அளித்த பேட்டி, இரு கட்சிகள் இடையிலான கூட்டணியை முறிக்கும் அளவுக்குச் சென்றிருக்கிறது.

ஜூன் 12ஆம் தேதி வெளியான ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கே. அண்ணாமலை அளித்த பேட்டியில் அவரிடம், "1991-96க்கு இடைப்பட்ட காலம்தான் மிக அதிக அளவில் ஊழல் நிறைந்த காலகட்டங்களில் ஒன்று என்பதை ஏற்பீர்களா?" எனக் கேட்கப்பட்டிருந்தது. இதற்குப் பதிலளித்த அண்ணாமலை, "தமிழ்நாட்டில் பல நிர்வாகங்கள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கின்றன. முன்னாள் முதல்வர்கள் நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது. ஊழலில் நம்பர் ஒன் மாநிலம் என்றுகூட சொல்வேன்," என்று பதிலளித்தார்.

இதையடுத்து, அன்று மதியமே செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலைக்கு கடுமையான கண்டனம் தெரிவித்தார். இதற்கு பாஜக நிர்வாகி கரு. நாகராஜன், "அண்ணாமலையின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல், பொறாமைப்பட்டு, காழ்ப்புணர்ச்சியோடு, உள்நோக்கத்தோடு, சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் போன்றவர்கள் பேசுகிறார்கள். அவர்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்," என்று குறிப்பிட்டார்.

இதற்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட கே. அண்ணாமலை, "கூட்டணிக் கட்சியையும், கூட்டணித் தலைவர்களையும் நடத்தும் விதம் குறித்து எனக்கு யாரும் எடுத்துச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை," என்று குறிப்பிட்டார்.

ஆனால், அதோடு நிறுத்தாமல் "ஆங்கில நாளேடுக்கு நான் கொடுத்திருந்த பேட்டியில், உண்மைக்குப் புறம்பாக ஏதேனும் கூறியிருந்தேன் என்று யாராவது நினைத்தால், அந்தத் தவறைச் சுட்டிக்காட்டி தெளிவுபடுத்த வேண்டும். அப்படி தெளிவுபடுத்தினால், அதை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை," என்றும் குறிப்பிட்டார். அதாவது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குறிப்பிடும் வகையில் "முன்னாள் முதல்வர்கள் ஊழலுக்காகத் தண்டிக்கப்பட்டனர்" என்ற கருத்தை அவர் திரும்பப் பெற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதையே இந்த அறிக்கை காட்டியது.

மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அ.தி.மு.கவின் பொதுச் செயலாளாராக இருந்த காலகட்டத்தில் கூட்டணிக் கட்சிகள் நடந்துகொள்ள வேண்டிய விஷயத்தில் தொடங்கி, எத்தனை இடங்கள், எந்தச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது வரை அ.தி.மு.கவே முடிவெடுக்கும்.

அ.தி.மு.கவின் கூட்டணியில் உள்ள கட்சிகள், சிறு அதிருப்தியை வெளிப்படுத்தினாலும் அந்தக் கட்சி, அ.தி.மு.க. கூட்டணியில் தொடர முடியாது. ஆனால், தற்போது அக்கட்சியின் மறைந்த முதலமைச்சரை, கூட்டணிக் கட்சியான பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் ஊழலுக்காகத் தண்டிக்கப்பட்டவர் என்று சுட்டிக்காட்டிப் பேசும்போதும் அ.தி.மு.க. கண்டனம் தெரிவிப்பதோடு நிறுத்திக்கொள்வதுதான் பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதனிடையே அண்ணாமலையை விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை கிண்டலடித்து மதுரையில் பாஜகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்களை அதிமுக- பாஜக இடையேயான மோதலை வெளிப்படுத்தியுள்ளது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு