குடியை நிறுத்தி ஓராண்டு நிறைவு : போஸ்டர் அடித்து கலக்கிய முன்னாள் குடி மக(கா)ன்..!
குடியை மறந்த மக(கா)ன் ஒருவர் அச்சடித்து ஒட்டிய போஸ்டர்.
குடியை விட்டு ஒரு வருஷம் ஆனதைக் கொண்டாடும் விதமாக அவர் பொது இடத்தில் ஒட்டுன போஸ்டர் தான் இப்போ வாட்சாப்ல வைரலாகிட்டு இருக்கு.
சம்மந்தப்பட்ட வரை தொடர்பு கொண்டு பேசியதில், "என் பெயர் மனோகரன். செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூர்ல இருக்கேன். 33 வருசமா குடிக்கு அடிமையா இருந்தேன். குடிச்சிட்டு நான் பண்ணாத சேட்டைகளே கிடையாது. என் ஃபிரண்ட்ஸ் தான் என்னை குடிகாரனாக்கினதே. கள்ளு, பீர், சாராயம்னு நான் குடிக்காத சரக்கே கிடையாது.
ஹைகிளாஸ்ல இருந்து அடிமட்ட சரக்கு வரைக்கும் அடிச்சிருக்கேன். வீட்ல காய்கறி வாங்கிட்டு வரச் சொல்லி 100 ரூபா கொடுத்தா அதை கொண்டுபோய் சரக்கடிச்சிடுவேன். வீட்ல கேட்டா ரூவா தொலைஞ்சு போச்சுன்னு பொய் சொல்வேன். இப்படி குடிக்கிறதுக்காக எப்படியெல்லாம் பொய் சொல்லலாம்னு தனியா உக்காந்து யோசிப்பேன்.
கண்ணு மண்ணு தெரியாம குடிச்சிட்டு நடுரோட்ல விழுந்து கிடப்பேன். இந்த குடியால சொந்த வீட்லயே எனக்கு மரியாதை போயிடுச்சு. என் பொண்டாட்டியே என்னை "போடா வாடா"னு பேச ஆரம்பிச்சிட்டா. "அவன் சரியான குடிகாரன்டா"னு ஊர்ல எல்லாரும் ஒதுக்க ஆரம்பிச்சிட்டாங்க. இதுக்கு மேல அசிங்கப்பட முடியாதுன்னு ஒருநாள் முடிவெடுத்து குடியை நிறுத்திட்டேன். குடியை விட்டு இப்போ சரியா ஒரு வருஷம் ஆச்சு.
நிறைய பேர் இப்பவும் நான் குடிகாரன்னு நினைச்சிட்டு இருந்தாங்க. நான் திருந்தினதை எப்படி தெரியப்படுத்தலாம்னு யோசிச்சப்பதான் இந்த போஸ்டர் ஐடியா தோணுச்சு. என் போட்டோவோட பெரிய போஸ்டரா அடிச்சு ஊருக்கு நடுவுல வெச்சிட்டேன். ரோட்ல போற வர்றவங்க எல்லாம் ஒரு நிமிஷம் நின்னு படிச்சு பார்த்துட்டு போறாங்க, நிறைய பேர் வாழ்த்து சொல்றாங்க, போஸ்டர போட்டோ புடிச்சு வாட்சாப்ல அனுப்புறாங்க.
குடியை விடுறது ரொம்ப கஷ்டம். நான் விட்டப்போ கையெல்லாம் நடுங்குச்சு. அதையும் மீறி கண்ட்ரோல் பண்ணிதான் ஜெயிச்சேன். இப்பெல்லாம் ரோட்ல போறப்போ ஒயின்ஷாப் பார்த்தா குடிக்கணும்னு தோண மாட்டேங்குது. ஒரு மளிகை கடை மாதிரி அதையும் ஒரு சாதாரண கடைனு கடந்து போய்டுவேன். இதுக்கு முன்னால என்னை குடிகாரன்னு மதிக்காதவங்க எல்லாம் இப்போ "என்ன மனோகரு நல்லா இருக்கியா?"னு விசாரிக்கிறாங்க வாழ்க்கையே மாறிடுச்சு. இனி சாகுற வரைக்கும் பாட்டிலை தொட மாட்டேன்" என்கிறார் மனோகரன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu