அண்ணாமலை அரசியல் செய்கிறார் : நாங்கள் மக்களுக்கு நன்மை செய்கிறோம் - திருச்சியில் முதலமைச்சர் சுருக் பேட்டி
கடந்த இரு தினங்களாக டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் நீர் ஆதார பணிகளை நேரில் பார்வையிட்ட முதல் அமைச்சர் முக ஸ்டாலின் இன்று இரவு திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நடந்துள்ள பணிகள் மன மகிழ்ச்சியை, மனநிறைவைத் தருகிறது. திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மகசூல் பெருக்கம், மகிழ்வு விவசாயிகள் உள்ளிட்ட 7 உறுதி மொழிகளைக் கூறி இருந்தேன்.அந்த உறுதிமொழிகள் ஒரு வருடத்தில் நிறைவேறும் நிலையில் உள்ளது.
கடைமடை வரை தண்ணீர் தங்கு தடையின்றி தண்ணீர் செல்ல 68 கோடி ரூபாயில் 467 கிலோமீட்டர் தொலைவிற்கு 647 பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 4.90 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியும், 13 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டது. அதேபோன்று இவ்வாண்டும் பருவ மழைக்கு முன்பே 80 கோடி ரூபாயில் 683 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. கடந்த 23ஆம் தேதி பணிகள் துவக்கப்பட்டு இன்றுடன் நிறைவு பெறுகிறது.
குறுவையில் 2.5 இலட்சம் ஏக்கரும் சம்பாவில் 13.05 லட்சம் ஏக்கரும் சாகுபடி பரப்பு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இவ்வாண்டும் விளைச்சலில் சாதனை புரிவோம்.
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு தூர்வார பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். எனவே கோடை பயிர் சாகுபடி அதிகரிக்கும். 69 கோடி ரூபாயில் குறுவை தொகுப்பு வழங்கப்படும். இதன் வாயிலாக 3 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள்.
ரூ 47 கோடி மதிப்பிலான Urea, DAP, பொட்டாஷ் உள்ளிட்ட ரசாயன உரங்கள் முழு மானியத்துடன் விவசாயிகளுக்கு வழங்கப்படும். டிராக்டர் உள்ளிட்ட உழவுக்கருவிகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஸ்டாலின் சாதி, மத மோதல்கள், வன்முறைகள் இல்லாமல் தமிழகம் அமைதி பூங்காவாக விளங்குகிறது. தோட்டக்கலை துறை மூலமாக பட்டியலின விவசாயிகளுக்கு மட்டும் 100 மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.
அது அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும். மகசூல் பெருக்கம் மகிழும் மக்கள் விவசாயிகள் என்பதை பார்க்கவே இந்த மின்னல் வேக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டேன்.
இன்றைய தேதியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெறுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வு ஊதியம், பணப்பலன்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம். பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் செய்கின்றார். நாங்கள் மக்களுக்கு நன்மை செய்கின்றோம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu