போலீஸ் மானியக்கோரிக்கை என்ன சொல்லப்போகிறார் முதல்வர்?
பைல் படம்.
தமிழகத்தில் உள்ள அரசுத்துறைகளில் பெரும் பாதிப்பினை சந்தித்து வருவது போலீஸ்துறை தான். அதிக பணிச்சுமை, மிக, மிக குறைந்த வசதிகள், குறைந்த சம்பளம், குறைந்த சலுகை, பதவி உயர்வு இன்மை, கடுமையான பணி நெருக்கடி என சொல்ல முடியாத பல தொல்லைகளை காவல்துறையினர் அனுபவித்து வருகின்றனர். இதர அரசுத்துறைகள் தங்களுக்குள் சங்கம் அமைத்து, தங்களது கோரிக்கைகளை, தேவைகளை, பிரச்னைகளை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று எப்படியாவது போராடி தீர்வு பெற்று விடுகின்றனர்.
ஆனால் போலீசாருக்கு இப்படி ஒரு வாய்ப்பே இல்லை. இதனை உணர்ந்து தான் அரசு ஆண்டு தோறும் போலீஸ் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த உத்தரவிட்டது. கடந்த ஆண்டு இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் நல்ல முறையில் நடந்தது. கீழ்நிலை போலீசார் பலரும் பல்வேறு தீர்வுகளை பெற்றனர். ஆனால் இந்த ஆண்டு இதுவரை குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்துவது குறி்த்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
முதல்வர் நேரடியாக கவனிக்கும் துறை என்பதால் சட்டசபை கூட்டத்தொடரில் பட்ஜெட்டில் சில அறிவிப்புகள் வெளியாகும் என போலீசார் காத்திருந்தனர். ஆனால் எந்த அறிவிப்பும் வரவில்லை. வரும் ஏப்., 20 மற்றும் 21ம் தேதிகளில் போலீஸ், தீயணைப்புத்துறை, சிறைத்துறையினருக்கான மானியக்கோரிக்கை நடைபெறுகிறது. இதிலாவது தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு தரும் வகையில் அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவாரா என போலீசார், தீயணைப்பு படையினர், சிறைத்துறையினர் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
குறிப்பாக போலீசாருக்கு வாரவிடுப்பு அறிவிப்பு, அறிவித்த நாள் முதல் பேப்பர் அளவில் உள்ளது. நடைமுறைக்கு வரவில்லை. சரண்டர் விடுப்பினை பணமாக மாற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனால் போலீசார் வேலை செய்தும் பணத்தை இழக்கின்றனர். கடும் வெயிலில் நின்று போராடும் போலீசாருக்கு நீர், மோர் கூட வழங்கப்படுவதில்லை. தவிர சலுகைகள் என எதுவும் இல்லை. இப்படி இவர்களின் நெருக்கடி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதே நிலை மற்ற அரசுத்துறைகளில் இருந்தால், அரசுடன் கடுமையாக போராடியிருப்பார்கள். ஆனால் போலீசார் மவுனம் காத்து அமைதியாக முதல்வர் பாதுகாப்பார் என்ற மனநம்பிக்கையில் உள்ளனர்.
கடந்த 1980ம் ஆண்டு இருந்த மக்கள் தொகைக்கு ஏற்பவே போலீஸ் ஸ்டேஷன்களும், போலீசாரும் உள்ளனர். அந்த பணியிடத்திலும் 30 சதவீதம் காலியாக உள்ளது. தற்போதைய மக்கள் தொகைக்கு கணக்கிடும் போது, இப்போது உள்ளதை போல் மூன்று மடங்கு அதிகம் போலீசாரும், ஸ்டேஷன்களும் தேவைப்படுகிறது. பதவி உயர்வு என்றால் என்னவென்றே தெரியாத அளவுக்கு போலீஸ்துறையில் அது ஒரு மறந்த போன சம்பவம் போல் ஆகி வி்ட்டது. இப்படி போலீசார் பிரச்னையை பட்டியல் போட்டால் இதர அரசுத்துறை ஊழியர்களே ஆச்சர்யப்பட்டு போவார்கள். அந்த அளவு போலீசாரும், தீயணைப்புத்துறையினரும், சிறைத்துறையினரும் நெருக்கடியினை அனுபவித்து வருகின்றனர். தனது நேரடி கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் துறையில் உள்ள போலீசாருக்கு முதல்வர் ஸ்டாலின் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu