போலீஸ் தாக்கி மாற்றுத்திறனாளி மரணம்? 3 போலீசார் சஸ்பெண்ட்- பரபரப்பு

போலீஸ் தாக்கி மாற்றுத்திறனாளி மரணம்? 3 போலீசார் சஸ்பெண்ட்- பரபரப்பு
X
சேந்தமங்கலத்தில் போலீசார் தாக்கி மாற்றுத்திறனாளி இறந்ததாக கூறப்படும் சம்பவத்தில், 2 எஸ்ஐக்கள் உள்ளிட்ட 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் கடந்த நவம்பர் மாதம், நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் உள்ள மளிகைக்கடை உரிமையாளர் ஒருவர் வீட்டில் புகுந்து, 20 பவுன் தங்க நகையை திருடியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் நடைபெற்ற விசாரணையில், மேலும் 5 பேருக்கு இந்த கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

அவர்களில், சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான பிரபாகரன் மற்றும் அவரது மனைவி ஹம்சலா ஆகியோரும் இருந்தனர். கடந்த 8ஆம் தேதி விசாரணைக்கு வந்தநிலையில், 10-ஆம் தேதி நாமக்கல் கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட பிரபாகரன், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய அவரது உறவினனர்கள், மற்றும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர், சடலத்தை வாங்க மறுத்து, கடந்த 13ம் தேதி சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, சாலை மறியலில் ஈடுபட்டனர். கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபாகரனின் மனைவி ஹம்சலா, தற்போது சேலம் பெண்கள் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, சேலம் சரக டிஐஜி (பொ) நஜ்மல்ஹோடா, இவ்வழக்கு தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரபாகரன் சந்தேக மரணம் என போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த 8ம் தேதி சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட மாற்றுத் திறனாளியான பிரபாகரனை, போலீசார் 10-ஆம் தேதியன்றுதான் கைது செய்தாகக் காட்டியுள்ளது தெரியவந்தது. உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 11-ஆம் தேதி நாமக்கல் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டதால் அவர் இறந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்தது.

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற ஜேஎம் 1 கோர்ட் நீதிபதி கலைவாணி, இவ்வழக்கில் நேரடியாக விசாரணை செய்தார். இந்த நிலையில் சேந்தமங்கலம் போலீஸ் நிலைய எஸ்ஐக்கள் சந்திரன், பூங்கொடி மற்றும் போலீஸ்காரர் குழந்தைவேலு ஆகிய 3 பேரை சஸ்பெண்ட் செய்து, டிஐஜி நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, பிரபாகரனின் உடலை அவரது உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பெற்றுச் சென்றனர். மாற்றுத்திறனாளி மர்ம மரண விவகாரத்தில் போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா