'போக்சோ' சட்டம் எப்போது? எப்படி? கொண்டுவரப்பட்டது தெரியுமா..? தெரிஞ்சுக்கங்கோ..!
Pocso Act Punishment Tamil
Pocso Act Punishment Tamil-பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் போக்சோ எனப்படுகிறது. அதாவது The Protection of Children from Sexual Offenses என்பது சுருக்கமாக POCSO) Act என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டமாகும். இதைத்தான் சுருக்கமாக போக்சோ சட்டம் என அழைக்கப்படுகிறது. இச்சட்டம் , மாநிலங்களவையில் 2012ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதியும், மக்களவையில் மே மாதம் 22ம் தேதியும் நிறைவேற்றப்பட்டது. இதற்கான விதிமுறைகளும் உருவாக்கப்பட்டு, நவம்பர் 14ம் தேதி அரசிதழில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இச்சட்டம் வருவதற்கு முன்னர் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, பொதுவான இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இப்பிரிவுகள், குழந்தைகள் வயது வந்தவர்கள் என்ற வித்தியாசமின்றி வழக்குகளைக் கையாண்டன. 18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச் சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகளில் சிறுவர்கள் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தண்டனை வழங்கும். பாலியல் தாக்குதல்/வன்முறை, பாலியல் துன் புறுத்தல்/சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது. குழந்தைகள் பாதிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் அவர்களின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடிக்கப்பட வேண்டும். இது கண்டிப்பாக பின்பற்றப் படவேண்டும். சாதாரண சிறைத் தண்டனையிலிருந்து, கடுங்காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம் என இந்த சட்டம் குறிப்பிடுகிறது. சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு.
உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக் குரியவர்கள். அவர்களே குற்றம் இழைக்கும் போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது. மாவட்ட அளவில் குழந்தை பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். தனி காவல்துறைப் பிரிவும் ஏற்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தை எங்கு தங்கவைக்கப்பட்டால் அக்குழந்தையின் நலனுக்கு உகந்தது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். சில சமயம், குடும்ப உறுப்பினர்களே குற்றம் செய்தவராக இருந்தால், அங்கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
குழந்தையின் நலனே முக்கியம்
சிறப்பு நீதிமன்றங்கள் இதற்காக நிறுவப்பட வேண்டும். வழக்கின் துவக்கத்திலிருந்து இறுதி வரை புகார் கொடுப்பது, முதல் தகவல் அறிக்கை பதிவு, விசாரணை, வாக்கு மூலம் பதிவு, வழக்கு நடப்பது போன்ற அனைத்திலும் பாதிக்கப் பட்ட குழந்தைகளின் நலன் மையமாக இருக்க வேண்டும். அதுதான் மிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய அம்சம் என்று சட்டம் கூறுகிறது. உதாரணமாக, "பாதிக்கப்பட்ட சிறுமி/சிறுவரின் சாட்சியம் அவர்களின் வீட்டிலோ அல்லது அவர்கள் விரும்புகிற இடத்திலோ தான் பதிவு செய்யப் பட வேண்டும். துணை ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பொறுப்பில் உள்ள பெண் காவல் அதிகாரி தான் சாட்சியம் பதிவு செய்ய வேண்டும். அப்போது காவலர் சீருடையில் அந்த அதிகாரி இருக்கக் கூடாது."இரவு நேரத்தில், அவர்களைக் காவல் நிலையத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது. குழந்தை எதை எப்படி சொல்லுகிறதோ, அதை அப்படியே அந்த வார்த்தைகளில் பதிவு செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளி என்றால், குழந்தை பேசுவதைப் புரிந்து கொண்டு எடுத்துச் சொல்ல சைகை மொழி பேசுபவர் அல்லது குழந்தையின் பெற்றோர் அல்லது உறவினரின் உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மருத்துவப்பரிசோதனை, பெற்றோர்/உற்றோரின் முன்னிலையில் செய்யப்பட வேண்டும்.
பெண் குழந்தை என்றால், பெண் மருத்துவர் செய்ய வேண்டும். அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க நேர்கிறபோது, மருத்துவர்கள் காவல் துறை அல்லது நீதித் துறையின் உத்தரவைக் கோரக் கூடாது. வழக்கு நடக்கும்போது, அடிக்கடி குழந்தை ஆசுவாசப் படுத்திக்கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும். விசாரணையோ, வழக்கோ, வாக்கு மூலமோ பாதிக்கப்பட்ட சிறுமி/சிறுவரைத் திரும்பத் திரும்ப நடந்ததைச் சொல்ல வற்புறுத்தக் கூடாது. குறுக்கு விசாரணை என்ற பெயரில் சங்கடப் படுத்தும் கேள்விகள் அல்லது நடத்தையை சந்தேகிக்கும் கேள்விகளைக் கேட்கக் கூடாது.
சிறப்பு பிரிவுகள்
குற்றம் இழைத்தவர்கள் மட்டுமல்ல, குற்றத்தை செய்யும் நோக்கத்துடன் அதற்காக முயற்சித்தவர்களும் குற்றவாளிகள் தான். பாலியல் வன்முறை செய்ய, ஒரு சிறுமியை இழுத்துச் சென்றிருக்கலாம். யாரோ வருகிறார்கள் என்பதற்காக விட்டு விட்டு ஓடியிருக்கலாம். பணம் திருடினாளா என்று பரிசோதிக்கவே தனியாக அழைத்து வந்தேன் என்று ஆசிரியர் கூறலாம். வழக்கு வந்தால், குற்றம் நடக்கவில்லையே என்று தப்பித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால், இச்சட்டம், தப்பிக்கும் வழியை மிகச் சரியாக அடைக்கிறது. குற்றத்துக்கு என்ன தண்டனையோ, அதில் பாதியை குற்றம் செய்யும் நோக்கத்துடன் முயற்சிப்பவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறுகிறது. மற்றொரு முக்கிய பிரிவு, பாலியல் வன் கொடுமை குற்றத்தைப் பொறுத்தமட்டில், குற்றம் நடந்தது என்று மனுதாரர் ப்ராசிகியூஷன் தரப்பு நிரூபிக்க வேண்டியதில்லை. குற்றவாளி தான், தான் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுவர், சிறுமியர் பெயரையும், அடையாளத்தையும், சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்பது அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. காவல் துறையும் வெளியிடக் கூடாது என்பது தான் இதன் பொருள்.
இழப்பீடு, நிவாரணம்
சிறப்பு நீதிமன்றம் தாமாகவோ, அல்லது பாதிக்கப்பட்டோரின் மனுவின் அடிப்படையிலோ தேவையைப் பொறுத்து இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். இறுதியில், குற்றவாளி தண்டனை பெற்றாலும், விடுவிக்கப்பட்டாலும் நிவாரணம் வழங்கலாம். குற்றவாளியை அடையாளம் காண முடியாவிட்டாலும், தலைமறைவாகப் போய் விட்டாலும் கூட, இழப்பீடு வழங்கலாம். உடல் காயம், மன உளைச்சல், மருத்துவச் செலவு, குடும்பத்தின் பொருளாதார நிலை ஆகியவற்றைக் கணக்கில் எடுக்க வேண்டும். மனதளவில் அல்லது உடல் நிலை சரியில்லாமல் அல்லது விசாரணை, வழக்குக்குச் செல்வதற்காகப் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் அதையும் கணக்கில் எடுக்க வேண்டும். எச்.ஐ.வி. தாக்கியிருந்தால், கர்ப்பமாகி விட்டால், ஊனமடைந்து விட்டால் அவையும் எடுத்துக் கொள்ளப்பட்டு, இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
மாநில அரசே நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவு பெற்று 30 நாட்களுக்குள் இது அளிக்கப்பட வேண்டும்.
இவ்வளவு வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிந்தால்தானே, பாதிக்கப்பட்ட குழந்தை யும், பெற்றோரும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்? இவை குறித்து அவர்களுக்குக் கூறப்பட வேண்டும் என்பது இச்சட்டத்தின் கீழ் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அதே போல் வழக்கின் விவரம் அவ்வப்போது அவர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.தேசிய, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தான் இச்சட்டத்தின் அமலாக்கத்தைக் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு போக்சோ சட்டம் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. அவர்களுக்கு பாதுகாப்பு முதல் நிவாரணம் வழங்குவது வரை சட்டத்தில் நெறிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த விபரங்கள் தெரியாதவர்களுக்கு படித்தவர்கள் இது குறித்த விபரங்களை எடுத்துக்கூறி அவர்களுக்கு வழிகாட்டவேண்டும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu