பெரம்பலூர் மாவட்டத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி முறிந்தது
காங்கிரஸ் கட்சியினர் தனியாக ஆலோசனை நடத்தினர்.
நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தமிழகம் முழுவதும் சேர்ந்து களம் காண்கிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு பெரம்பலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பெரம்பலூர் நகராட்சியில் போட்டியிட ஒரு இடம் ஒதுக்குவதாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் காங்கிரஸ் கட்சியினர் தி.மு.க.வினரிடம் 13-வது வார்டை ஒதுக்குமாறு தொடர்ந்து கேட்டு வந்ததாக தெரிகிறது.ஆனால் தி.மு.க.வினர் 13-வது வார்டு ஒதுக்க முடியாது, எனவும் அதற்கு பதிலாக 21-வது வார்டை ஒதுக்குவதாக காங்கிரசாரிடம் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
இதேபோல் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிக்காடு ஆகிய பேரூராட்சிகளில் தலா 2 வார்டுகள் ஒதுக்குமாறு காங்கிரஸ் கட்சியினர் தி.மு.க.வினரிடம் கேட்டனர்.
அதற்கு தலா 2 வார்டுகளை காங்கிரசுக்கு ஒதுக்க முடியாது என தி.மு.க. தரப்பில் கூறப்பட்டதாம்.இதனால் அதிருப்தியடைந்த காங்கிரஸ் கட்சியினருடன் அதன் மாவட்ட தலைவர் சுரேஷ் ஆலோசனை நடத்தினார்.
அதன் முடிவில் நகராட்சி, பேரூராட்சிகளில் கேட்ட வார்டுகளை ஒதுக்காததால், தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட முடிவு செய்திருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சுரேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu