குன்னம் அருகே பேருந்தை சிறைப்பிடித்து மாணவர்கள் திடீர் சாலை மறியல்

குன்னம் அருகே பேருந்தை சிறைப்பிடித்து மாணவர்கள் திடீர் சாலை மறியல்
X

குன்னம் அருகே அரசு பஸ்சை மாணவர்கள் சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பேருந்தை சிறை பிடித்து மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பரவாய் மற்றும் அதனைச்சுற்றி ஆண்டி குரும்பலூர், சமத்துவபுரம், மழவராயநல்லூர், குடிக்காடு, வைத்தியநாதபுரம், கல்லம்புதூர் ஆகிய கிராம பகுதி மாணவ மாணவிகள் 6ம் வகுப்பு முதல் 12 வகுப்பு படிப்பதற்கு வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சுமார் 150 மாணவர்களும், குன்னம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் சென்று வருகின்றர்.

அதுமட்டுமல்லாமல் குன்னம் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து குன்னத்தின் வழியாகவே வேப்பூர் அரசு மகளிர் கல்லூரிக்கு அரசு பேருந்தில் பயணம் செய்து படித்து வருகின்றனர். இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் அரசு பஸ்சை நம்பியே பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா பெரும் தொற்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்பொழுது பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கல்லூரி மாணவிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடியே ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக கல்லூரி மாணவிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஐந்து கிலோ மீட்டர் தூரம் உள்ள இடத்திற்கு நடந்து சென்று வருகின்றனர் . இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு கல்லூரிக்கும் பள்ளிகளுக்கும் செல்ல முடியாமல் மாணவர்கள் சிரமப்பட்டனர்.

இதனால் ஆத்திரமுற்ற மாணவர்கள், பொது மக்கள் பரவாய் ஆலமர பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற டவுன் பஸ்சை நிறுத்தி திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ் ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவ மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்றும், அதேபோல் அனைத்து நிறுத்தங்களிலும் நிறுத்தி மாணவர்களை ஏற்றி செல்ல வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் போலீசார் அரியலூர் அரசு போக்குவரத்து கழக மேலாளரிடம் தொடர்புகொண்டு பேசினர். அவரும், கூடுதல் பஸ் இயக்க உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்