முகநூல் நட்பை பயன்படுத்தி கல்லூரி மாணவரிடம் நூதன முறையில் பணமோசடி செய்தவர் கைது
முகநூல் நட்பை பயன்படுத்தி கல்லூரி மாணவரிடம் நூதன முறையில் பணமோசடியில் ஈடுபட்ட குற்றவாளியை புகாரை பதிவு செய்த 36 மணி நேரத்தில் பெரம்பலூர் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.
முகநூல் நண்பராய் அறிமுகமாகி குறைந்த விலையில் செல்போன் மடிகணினி வாங்கி தருவதாக கூறி ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்த இளைஞரை பெங்களூருவில் வைத்து பெரம்பலூர் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்து, அவரிடமிருந்து ரூ 85 ஆயிரம் ரொக்கம், ஏடிஎம் கார்டு 2 மற்றும் இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூரில் தனியார் வேளாண் கல்லூரியில் பயின்று வரும் மாணவர் தினேஷ் .சேலம் மாவட்டத்தை சேர்ந்த இவருடன் இணையதளத்தில் ஜெகன் என்ற இளைஞர் முகநூல் நண்பராய் பழகி வந்தாராம். தினேஷிடம் குறைந்த விலையில் மடிகணினி மற்றும் செல்போன் வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி, அவரிடமிருந்து ரூ.1.85 லட்சத்தை வங்கி கணக்கு மூலம் பெற்று கொண்டு தனது இணைய முகவரியை முடக்கியதாகக் கூறப்படுகிறது.
பணத்தை இழந்த மாணவர் தினேஷ், பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் குற்றப்பிரிவில் நேற்று முன்தினம் (19.01.2022) அளித்த புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த போலீஸார் இணையவழி குற்றங்களை கண்டறியும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடத்திய புலன்விசாரணையில் நூதன பண மோசடியில் ஈடுபட்ட நபர் தேனி மாவட்டம் , போடிநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஜெகன்(29) என்பதை கண்டு பிடித்தனர்.
மேலும் அவர், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருப்பதையறிந்த போலீஸார், சைபர் கிரைம் பிரிவுஆய்வாளர் கலா தலைமையில் குழுவாக பெங்களூரு சென்று ஜெகனை கைது செய்தனர். மேலும் அவபிடமிருந்து ரூபாய் 85 ஆயிரம் ரொக்கம், இரண்டு ஏடிஎம் கார்டுகள் 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் ஜெகனை போலீஸ் பாதுகாப்புடன் பெரம்பலூர் அழைத்து வந்த சைபர் கிரைம் போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். புகார் அளித்து 36 மணி நேரத்தில் நூதனமோசடி குற்றவாளியை போலீஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu