பெரம்பலூர்: தொடர் மழையால் வெள்ளை பூசணி, பரங்கி காய்கள் அழுகி சேதம்
பெரம்பலூர் மாவட்டத்தில் மழையால் சேதம் அடைந்த வெள்ளை பூசணி காய்களை விவசாயி காட்டுகிறார்.
பெரம்பலூர் மாவட்டம் என்றாலே சின்னவெங்காயம், மக்காச்சோளம் மற்றும் பருத்தி போன்ற பயிர்களே நினைவுக்கு வரும். இருப்பினும் கூடுதலாக பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் சாம்பல் பூசணி என்று அழைக்கப்படும் வெள்ளை சாம்பார், சாம்பார் பரங்கி, மஞ்சள், மரவள்ளி மற்றும் சேனைக்கிழங்கு போன்ற துணை பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் அய்யலூர், வரகுபாடி, சிறுகன்பூர், நாரணமங்கலம், சாத்தனூர், குடிகாடு உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் வெள்ளை பூசணி மற்றும் சாம்பார் பரங்கி போன்ற கொடி வகை பயிர்களை சாகுபடி செய்திருந்தனர். ஆண்டுதோறும் இந்த பயிர்கள் இவர்களுக்கு ஓரளவிற்கு வருமானம் தந்த நிலையில், இந்த ஆண்டு தொடர்ச்சியாக பெய்த வடகிழக்கு பருவ மழையின் காரணமாக விளை நிலங்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. அதேபோல வெள்ளை பூசணி மற்றும் சாம்பார் பரங்கி கொடிகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியதால் காய்கள் அனைத்தும் வயலிலேயே அழுகிப்போனது.
சாதாரணமாக கிலோ ரூ.10லிருந்து ரூ.15 வரை விற்பனையான இந்த காய்கள் தற்பொழுது ஒரு ரூபாய்க்கு கூட வாங்க ஆள் வரவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பெரும்பாலான காய்கள் வயலிலேயே அழுகி விட்ட நிலையில் மீதமுள்ள கொஞ்சநஞ்ச காய்களையும் வாங்குவதற்கு ஆட்கள் வராததால் வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் விவசாயிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளாக கூறும் விவசாயிகள், தற்போது வடகிழக்கு பருவ மழையினால் ஏற்பட்டுள்ள சேத மதிப்பீடு ஆய்வு செய்தும் வருவாய்த்துறை, தோட்டக்கலை மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் கொடி வகை பயிர்களுக்கும் முறையான ஆய்வு நடத்தி ஏக்கருக்கு சுமார் ரூ.40 ஆயிரம் வரையில் எங்களுக்கு இழப்பீடு பெற்ற தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாம்பார் என்றாலே ஒரு காலத்தில் சாம்பல் பூசணியும் பரங்கி காயும் நினைவுக்கு வருவது வழக்கம். பரங்கிக்காய் இல்லாமல் எந்த ஒரு உணவு விடுதியிலும் சாம்பார் செய்யப்படுவதில்லை என்ற நிலையில், நாக்கிற்கு ருசியையும், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் தரக்கூடிய இந்த காய்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளை காப்பாற்றுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu