தி.மு.க.,வின் வெற்றிக்கு காரணம் மக்கள் நலத்திட்டங்கள், உழைப்பு..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.(கோப்பு படம்)
லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணி அதிகபட்சம் 32 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. கருத்துக்கணிப்புகளும் அப்படியே தெரிவித்தன. ஆனால் தி.மு.க., 38 தொகுதிகளை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த அபார வெற்றிக்கு என்ன காரணம்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்கள் நலத்திட்டங்களில் பெரும் கவனம் செலுத்தி வந்தது. பெண்களுக்கு இலவச பஸ்பயணம், தகுதியான குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, கல்லுாரி படிக்கும் மாணவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை என பெண்களுக்கான நலத்திட்டங்களை வழங்கியது.
இந்த பணம் வங்கிகள் வழியாக வழங்கப்பட்டதால் மக்களின் கைகளுக்கு நேரடியாக சென்று சேர்ந்தது. அடுத்து கல்லுாரி படிக்கும் மாணவர்களுக்கும் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதியும் கொடுத்தது.
கடும் அதிருப்தியில் இருந்த போக்குவரத்துதுறை ஊழியர்களை பேசி சரிகட்டியது. குறிப்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களை அழைத்து, ‘மாநிலத்தின் நிதி நிலைமை சரியாகட்டும். உங்களுக்கு நிச்சயம் நாங்கள் பழைய ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்கிறோம்’ என முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார்.
ஆனால் பா.ஜ.க.,வோ, அ.தி.மு.க.,வோ அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்களை கண்டுகொள்ளவில்லை. தவிர பெண்கள், மாணவிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை பற்றி எந்த வாக்குறுதியும் தரவில்லை. விமர்சனமும் செய்யவில்லை. மாறாக தி.மு.க., முஸ்லிம்கள், சிறுபான்மையினர் ஓட்டுக்களை தக்க வைத்துக் கொண்டது. பா.ஜ.க.,வோ சிறுபான்மையினர், முஸ்லிம்கள் ஓட்டுக்களை கவர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாறாக இந்துத்துவா ஒட்டு வங்கியை உருவாக்க முயற்சித்தது. பா.ஜ.க.,வின் அந்த முயற்சி பெரும் தோல்வியில் முடிந்தது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன. இதனையெல்லாம் விட ஆளும் கட்சி, அசுரபலமான கூட்டணி, மக்கள் நலத்திட்டங்கள், பெண்களுக்கான திட்டங்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் வாக்குகள் நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தாலும், தி.மு.க.,வின் உழைப்பு அசாத்தியமானது. இதற்கு தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் அபாரமான கட்சி நிர்வாக உள்கட்டமைப்பும் உதவி செய்தது.
மற்ற கட்சிகளுடன் ஒப்பிடும் போது, இந்த தேர்தலில் தி.மு.க.,வினர் நுாறு மடங்கு அதிக உழைப்பினை வழங்கினர். இப்படி பல காரணங்களால் இவ்வளவு எதிர்ப்பையும் மீறி மீறி தி.மு.க., வென்றதற்கு இதுவே முக்கிய காரணம் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu