கார்ப்பரேட் பாணியில் கலக்கும் நுங்கு வியாபாரம்
தேனியில் பெரியகுளம் ரோட்டோரம் கடும் வெயிலில் அமர்ந்து நொங்கு விற்கும் விவசாயி.
தமிழகத்தில் கொங்கு மண்டலம் பகுதியிலும், நெல்லை மண்டல பகுதியிலும் நுங்கு விளைச்சல் அதிகம் உள்ளது. இங்குள்ள பனைமரங்கள் மூலம் நுங்கு மட்டுமின்றி, கள், பதனீர், கருப்பட்டி உட்பட பல பொருட்களை இறக்கி விற்கின்றனர். பனை ஓலை கூட மிகுந்த மதிப்பு வாய்ந்த வியாபார பொருளாக இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். தற்போது பனை நடவு ஒரு இயக்கமாகவே தமிழகத்தில் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நுங்கு சீசன் தை மாதம் கடைசியில் அல்லது மாசி மாதம் முதல் வாரம் தொடங்கும். வைகாசி மாதம் கடைசி அல்லது ஆனி மாதம் முதல் வாரம் வரை நுங்கு சீசன் இருக்கும். இந்த கால கட்டம் மிகுந்த வெப்பமான கோடை காலம். இந்த கோடை வெயிலில் நான்கு ரோடுகள், மூன்று ரோடுகள் சந்திப்பிலும், முக்கியத்துவம் வாய்ந்த ரோட்டோரங்களிலும் நுங்கு வியாபாரிகள் வெயிலை கண்டு கொள்ளாமல் அமர்ந்து வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர்.
அவர்கள் கடும் வெயிலில் அமர்ந்து வியாபாரம் செய்யும் சிரமத்தை பார்க்கும் மக்கள் பெரும்பாலும் பேரம் பேசாமல் வாங்கிச் சென்று விடுகின்றனர். இது தான் அவர்களின் மிகப்பெரிய வெற்றி. நுங்கு வியாபாரிகள் வலிய போய் யாரிடமும் பரிதாப்படுங்கள் என கேட்பதில்லை. ஆனால் அவர்களின் கடும் உழைப்பை பார்த்த மக்கள் அந்த உழைப்புக்கு மரியாதை தரும் விதமாக பரிதாபப்பட்டு, அந்த பரிதாப உணர்வை வணிகமாக்கி அவர்களுக்கு உதவுகின்றனர். கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் இதே நிலை தான்.
இந்த நுங்கு வியாபாரிகள் ஒவ்வொரு ஊரிலும் 30 பேர் முதல் 60 பேர் வரை ஊரின் திறனுக்கு தகுந்தாற்போல் இருப்பார்கள். இவர்கள் வியாபாரம் செய்யும் ஊரிலேயே நுங்கு விவசாயிகள் இவர்களுக்கு தங்கும் வசதி செய்து கொடுத்து விடுகின்றனர். சாப்பாடு கொடுத்து விடுகின்றனர். தினமும் சம்பளம், பேட்டா தருகின்றனர். வியாபாரம் செய்யும் இடத்திற்கே வந்து நுங்கு இறக்கி விட்டுச் செல்கின்றனர்.
தினமும் நுங்கு இறக்கி விட்டு, விற்ற நுங்கிற்கான பணத்தை வாங்கிக் கொண்டு செல்கின்றனர். தென்னை இளநீர் தொழிலில் கொடி கட்டிப்பறக்கும் விவசாயிகள் கூட இப்படி துல்லியமாக வியாபாரம் செய்ததில்லை. பனை விவசாயிகள் இதில் சாதித்துக் காட்டி உள்ளனர். தாங்கள் விளைவிக்கும் பனைநுங்கினை, வியாபாரிகளிடம் தராமல், தாங்களே ஒரு கூட்டமைப்பினை உருவாக்கி, அதன் மூலம் ஊர் தவறாமல் நுங்கு வியாபாரிகளை நியமித்து, அவர்களுக்கு தேவையான அத்தனை வசதிகளும் செய்து கொடுத்து, பணம் சம்பாதிக்கின்றனர்.
சமூக வலைதளங்களிலும் நுங்கு மற்றும் பனை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி தங்கள் வியாபாரத்தை பெருக்கி, முறையான லாபம் சம்பாதிக்கின்றனர். ஆனால் தென்னை, நெல் விவசாயிகள் உட்பட எந்த விவசாயிகளிடமும் இப்படி ஒரு கூட்டமைப்பும், ஒற்றுமையான தொழில்குழுவும் இல்லை. இதனால் தான் பிற விவசாயிகள் பெரும் வீழ்ச்சியை சந்திக்கின்றனர். பனை விவசாயிகள் வெற்றிக்கொடி நாட்டி உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu