பழநி முருகன் கோயில் உண்டியல் பணத்தை திருடிய பேராசிரியை..!
பழனி முருகன் கோயில் (கோப்பு படம்)
திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோயிலில் மாதந்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறும். இந்தப் பணியில் கோயில் பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் என பலரும் ஈடுபடுவது வழக்கம்.
அந்த வகையில் ஓரிரு நாட்களுக்கு முன்னர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் அலுவலர்கள், கோயில் பணியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இந்த எண்ணிக்கையில் 778 கிராம் தங்கம், 12.039 கிலோ வெள்ளி, 1.66 கோடி ரூபாய் காணிக்கையாக கிடைத்தாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஒரு பெண் உண்டியல் பணத்தை திருடுவது சிசிடிவி கேமராவில் பதிவாகியது. இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் பழநி அடிவாரம் போலீஸாரிடம் புகார் அளித்தனர். போலீஸார் விசாரணை நடத்தியதில் பழநியாண்டவர் கல்லூரி உதவி பேராசிரியர் மைதிலி (37) என்பவர் உண்டியல் காணிக்கை பணத்தில் 82 ஆயிரம் ரூபாயை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து, உதவி பேராசிரியரை கைது செய்தனர்.
இதுகுறித்து கோயில் நிர்வாகம் தரப்பில் விசாரித்தோம். ``கடந்த ஆண்டு நடந்து முடிந்த கும்பாபிஷேகத்தை தொடர்ந்து முருக கடவுளுக்கான விழாக்கள் அடுத்தடுத்த நடந்து வருகின்றன. இதனால் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிமாக வருகிறது. இதனால் உண்டியல் காணிக்கையும் அதிகமாக கிடைப்பதால் மாதந்தோறும் எண்ணிக்கை பணி நடக்கிறது. பணம் எண்ணும் பணி நடக்கும் பகுதியில் சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தியுள்ளோம். இறை பற்றுவர்களால் தான் எண்ணிக்கை நடத்துகிறோம்.
ஆனால் அதையும் மீறி கோயில் பணத்தை திருடியது அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு முன் கோயில் பணியாளர்கள் இதுபோன்ற திருடி மாட்டிய நிகழ்வு நடத்திருக்கிறது. இம்முறை கல்லூரி பேராசிரியை ஒருவரே திருட்டில் சிக்கியிருப்பது வருந்தத்தக்கதாக உள்ளது” என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu