கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 5 % பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 5 % பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை
X

தஞ்சாவூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, முனிசிபல் காலனியில் நடைபெற்று வரும் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை பார்வையிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 5 % பேர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதாக அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 5 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, முனிசிபல் காலனியில் நடைபெற்று வரும் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் , மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் முன்னிலையில் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் (10.7.2022) முகாமை பார்வையிட்டு பேசியதாவது:

தமிழகத்தில் இன்று 1 லட்சம் இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்த முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 3471 இடங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 93.10 சதவீதமும், 2-ம் தவணை தடுப்பூசி 87.10 சதவீதமும் போடப்பட்டுள்ளது. 12-14 வயது மற்றும் 15-17 வயது உடையவர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி தன்னிறைவு பெற்ற மாவட்டமாக விளங்குகிறது.

தற்போது மாவட்டத்தில் 143 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.தமிழகத்தை பொறுத்தவரை முதல் தவணை தடுப்பூசி 94.68 சதவீதமும், இரண்டாம் தவணை தடுப்பூசி 85.47 சதவீதம் பேருக்கும் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.மீதி 5 சதவீதம் பேர் மட்டுமே அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர். தமிழகத்தில் தற்போது 21513 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். தடுப்பூசி பயன்பாட்டால் உயிர் இழப்பு இல்லை என்பது ஆறுதலான விஷயம் .

தமிழகத்தில் இதுவரை 11 கோடியே 43 லட்சத்து 23 ஆயிரத்து 144 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு இளம் பெண் ஒருவர் பலியானார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்து உண்மைதான். ஆனால் அவர் தற்கொலை முயற்சிக்காக விஷம் அருந்தியதால் தான் இறந்தார் என கூறப்படுகிறது.

இதேபோல் சென்னையில் ஒருவர் இறந்ததற்கும் வேறு காரணம் உள்ளது. உலகில் பல்வேறு நாடுகளில் பிஏ 4, பிஏ 5 என உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களில் உருமாறிய பாதிப்பு கண்டறியப்பட்டு ள்ளது. இருப்பினும் அவற்றால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.தமிழகத்தில் 40 சதவீதத்திற்கும் மேல் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலை வந்தால் மட்டுமே கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தற்போது 5 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் ஊரடங்கு போட வாய்ப்பு இல்லை.

சுகாதார செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 4308 காலி பணியிடங்கள் செப்டம்பர் இறுதிக்குள் நிரப்பப்படும். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் காலரா பாதிப்பு இருந்தது தெரிய வந்தவுடன் அதனை ஒட்டி உள்ள திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு. பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது.இதன் காரணமாக காலரா பாதிப்பு நம் மாநிலத்திற்க்கு வரவில்லை என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் .மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் மரு.செல்வவிநாயகம், சட்டமன்ற உறுப்பினர்கள்துரை.சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் , தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி , துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) மரு.நமச்சிவாயம், மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!