நியாயம் -யதார்த்தம்..! மக்கள், அரசியல் கட்சிகள்..! என்னங்க இது? (Exclusive)
லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் வந்தாலே 'ஓட்டுக்கு பணம் வாங்காதே', 'உன் ஓட்டை விற்காதே' என பலரும் கருத்து சொல்ல வந்து விடுகின்றனர். தேர்தல் கமிஷன் ஒரு படி மேலே போய், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தனிப்படையே அமைக்கும். 'ஓட்டுக்கு பணம் கொடுக்காதே , ஓட்டை பணத்திற்கு விற்காதே' என்ற கோஷங்கள் தேர்தல் பிரச்சாரங்களை விட அதிகமாக இருக்கும்.
ஆனால், எப்போதுமே பணம் கொடுப்பதை ஆளும் கட்சி தான் ஆரம்பிக்கும். அவர்கள் கொடுத்த பின்னர், எதிர்க்கட்சிகள் கொடுக்க ஆரம்பிப்பார்கள். இந்த நேரங்களில் ஓட்டுக்கு பணம் வாங்கிய மக்களை பற்றி பல தரக்குறைவான வாசகங்களும், குறும்படங்களும் வெளியாகும். இப்படி சொல்பவர்கள் எல்லாருக்கும் தாங்கள் தான் நியாயவாதிகள் என்று நினைப்பதுவும் தவறு.
இந்த விஷயத்தில் ஒரு சிறு இடைச்சொருகள். ஓட்டை விற்று நாட்டை கெடுக்காதே என கோஷமிடுபவர்களில் மிகப்பெரும்பாலானோர் தேர்தல் நேரத்தில் தங்கள் ஓட்டை பதிவு செய்வதில்லை. ஓட்டுக்கு பணம் வாங்குவதை விட ஓட்டை பதிவு செய்யாமல் இருப்பதே ஜனநாயகத்திற்கு செய்யும் மிகப்பெரும் துரோகம் என்பது இவர்களுக்கு எப்போது புரியும் என்பது தெரியவில்லை.
அதனை பற்றி பின்னர் பேசலாம். தற்போது விஷயத்திற்கு வருவோம். எந்த தேர்தலாக இருந்தாலும் ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள் யார்? அவர்கள் எவ்வளவு தான் கொடுத்து விடுவார்கள். ஓட்டுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநுாறு ரூபாய் கூட கொடுப்பார்கள் என கணக்கில் வைத்துக் கொள்வோம். இந்த பணம் ஒரு குடும்பத்திற்கு எந்த அளவு உதவிட முடியும்? தற்போதைய பொருளாதார நிலையில், இந்த குறைந்த தொகை பணத்திற்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை உண்மையில் ஒற்றை சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும். அவர்களின் வாழ்வியல் சூழல் என்பதால் மன்னித்து விடலாம்.
ஆனால். குறைந்தபட்சம் ஒவ்வொரு அரசியல் கட்சியும் 80 சதவீதம் பேருக்கு பணப்பட்டுவாடா செய்கின்றனர். இது உறுதிப்படுத்தப்பட்ட உண்மை. இவர்கள் எல்லாம் பிழைக்க வழியில்லாமலா பணம் வாங்குகிறார்கள்? கருத்து சொல்பவர்கள் சற்று கவனமுடன் சிந்திக்க வேண்டும். பணம் கொடுப்பது ஒவ்வொரு வார்டிலும் உள்ள வார்டு செயலாளர். அத்தனை கட்சிகளும் தங்கள் கட்சி பிரமுகர்கள் மூலம் தான் பணம் கொடுக்கிறார்கள். அதாவது தங்களது பக்கத்து வீட்டிலோ அல்லது பக்கத்து தெருவிலோ வசிப்பவர்கள் தான் ஓட்டுக்கு பணம் தருகின்றனர்.
இவர்களிடம் பணம் வேண்டாம் என மறுத்தால் என்னவாகும். பணம் வாங்க மறுத்தவர்கள் அந்த கட்சிக்கே ஓட்டு போட்டாலும், இவர்கள் பணம் வாங்கவில்லை. எனவே நமக்கு ஓட்டு போட மாட்டார்கள் என்ற நினைப்பு தான் அந்த கட்சியினர் மத்தியில் நிலைத்து நிற்கும். இதில் நாம் பணம் வாங்க மறுத்தவர் வெற்றி பெற்று விட்டால், அடுத்து அவரிடம் எந்த ஒரு விஷயத்திற்கும் போய் நிற்க முடியாது. அப்படி போய் நின்றாலும், நீங்க எங்களுக்கா ஓட்டு போட்டீர்கள்? யாருக்கு போட்டீர்களோ அவர்களிடம் போய் கேளுங்கள் என்று கூறி ஒதுங்கி விடுவார்கள். அவருக்குத் தான் போட்டோம் என எப்படி நிரூபிக்க முடியும்? ஓட்டு சீட்டை எடுத்தா காட்ட முடியும்?
சிலர் ஒருபடி மேலே போய் நம் வீட்டு முன் வளர்ந்திருக்கும் மரக்கிளை மின்வயரை உரசினாலும் கூட வெட்ட விட மாட்டார்கள். குடிநீர், தெருவிளக்கு, கழிவுநீர் கடத்துதல், குப்பை அகற்றுதல் போன்ற அன்றாட வாழ்வியல் பிரச்னையை உருவாக்குவார்கள். சிலர் ஓருபடி மேலே போய் பழிவாங்க தொடங்குவார்கள். இந்த சம்பவங்கள் நாடு முழுவதும் நடக்கவில்லை என்றாலும், நாட்டில் பல இடங்களில் நடந்து வருகிறது என்பது அத்தனை பேருக்கும் தெரியும்.
எனவே, பணம் கொடுப்பவர்களிடம் வாங்கிக் கொண்டால், நாம் மாற்றி போட்டாலும், வெற்றி பெற்றவரிடம், 'சார் நான் உங்களுக்கு தான் ஓட்டு போட்டேன்' என உறுதியாக கூறலாம். இதற்கும் ஆதாரம் இல்லை. ஆனால், நாம் பணம் வாங்கியிருப்பதால் சொன்னால் நம்புவார்கள். நாம் ஓட்டுப்போடாமல் தோற்றவர்கள், (போட்டிருந்தாலும் தோற்றவர்கள்), நெருக்கடி கொடுத்தால், வென்றவரிடம் சார், உங்களுக்கு ஓட்டு போட்டதால் எனக்கு இப்படி ஒரு சிக்கல் என கூறினால், நிச்சயம் அந்த நபர் அதாவது வெற்றி பெற்றவர் நமக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ பக்கபலமாக நிற்பார். உண்மையில் இது தான் சாதாரண மக்களின் ஜனநாயகம். இப்படி சார்ந்து வாழ வேண்டிய நிலையில் தான் மக்கள்உள்ளனர். சாதாரண மக்கள் முதல் பெரும் தொழிலபதிபர் வரை இப்படி ஒரு சார்பு வாழ்க்கையை சந்தித்தே ஆக வேண்டும். இந்தியாவின் தற்போதைய ஜனநாயக கட்டமைப்பு அப்படித்தான் உள்ளது.
எனவே, ஓட்டுக்காக வாங்கும் பணம் பெரிய மாறுதலை உருவாக்கப்போவதில்லை என்றாலும், ஏன் பணத்தை மறுத்து வெளிப்படையாக பகைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் சராசரி மக்களின் எண்ணமே தவிர, ஆசைப்பட்டு அல்ல என்பதை கருத்து கந்தசாமிகள் முதல் தேர்தல் ஆணையம் வரை புரிந்து கொள்ள வேண்டும். வாய் புளித்ததா, மாங்காய் புளித்ததா என மக்களை எளிதாக கேலி பேசி விடக்கூடாது.
சரி இப்போது அரசியல் கட்சிகளின் பக்கம் வருவோம். முதல்வர் ஸ்டாலின் தற்போது மிகச்சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் என்பது அத்தனை பேருக்கும் தெரியும். இந்தியாவின் மிகச்சிறந்த முதல்வர் என்று பத்திரிக்கைகள் புகழ்ந்து தள்ளுகின்றன. கவர்னர் ஒரு படி மேலே போய் சட்டசபையிலேயே வெகுவாக பாராட்டி உள்ளார். உண்மையும் அது தான். ஸ்டாலின் சிறப்பான செயல்படுகிறார். ஆனால் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திக்கும் திறன் அந்த கட்சிக்கு உண்டா? என்றால் இல்லை என்பதே அத்தனை பேரின் பதிலாக இருக்கும்.
கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரைமுன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சி பொற்கால ஆட்சி என்பது அத்தனை பேருக்கும் தெரியும். வீடுகளில் கூட மண் தரைகள் இருந்த நேரத்தில் கிராமம், நகரம் என பாகுபாடு இன்றி ரோடுகளை முழுக்க முழுக்க சிமென்ட்ரோடாக மாற்றியவர் அவர். கருணாநிதி போட்ட சிமென்ட்ரோட்டில் தினமும் மாலை 5 மணிக்கு தண்ணீர் ஊற்றி குளிர வைத்து இரவில் பாய் விரித்து துாங்கியவர்கள் எண்ணிக்கை பல லட்சத்தை தாண்டும். பல கிராமங்களில் இன்னும் கூட அந்த ரோடுகளில் மக்கள் துாங்குகின்றனர். ஆனால் 2011 தேர்தலில் நடந்தது என்ன? அப்போது அடி வாங்கிய தி.மு.க., பத்து ஆண்டுகள் கழித்தே மீண்டு வந்துள்ளது. இதற்கு காரணம் என்ன? இந்த கேள்விக்கு பணம் தான் என்பதே அக்கட்சியினரின் பதிலாக உள்ளது.
ஏன் உலகின் சிறந்த தலைவராக உருவாகி உள்ள பிரதமர் மோடி, இந்திய மக்களில் 72 சதவீதம் பேரின் ஆதரவை பெற்றுள்ளார். அவரின் ஆளுமை, ஆட்சி சிறப்பு அத்தனை பேருக்கும் தெரியும். உலகமே கொண்டாடும் ஒரு பிரதமரை பெற்றுள்ள பாரதீயஜனதா ஓட்டுக்கு பணம் தராமலா களத்தை சந்திக்கிறது. அவர்களும் பணம் தருகிறார்களே. இது ஏன்?
அ.தி.மு.க.,வினரிடம் கேட்டால், எங்களின் ஆகாய கங்கையாக விளங்கிய ஜெயலலிதா இருந்த போதே எத்தனை முறை கவிழ்ந்தோம் தெரியுமா? எனவே,பணம் தராமல் இருக்க முடியுமா? என்கின்றனர். ஆனால், மக்களுக்கும் தெரியும், அரசியல் கட்சிகளுக்கும் தெரியும். எது நியாயம், எது அநியாயம் என்று. இந்த நியாயத்திற்கும்- யதார்தத்திற்கும் உள்ள இடைவெளியை தீர்மானிக்க முடியாமல் அத்தனை பேரும் தவிக்கின்றனர். இந்த கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை என்பது தான் உண்மை. ஆனால், சூழல் மட்டுமே எது நியாயம்? எது அநியாயம் என்பதை தீர்மானிக்கிறது. எனக்கு தேவை இருப்பதால் பணம் வாங்குவதை நான் நியாயம் என்கிறேன். தேவை இல்லாதவர் அதை அநியாயம் என்கிறார். ஆக, சூழல் தான் யதார்த்தம், நியாயம், அநியாயம் என்பதை நேர் கோடாக்கும் காரணியாக இருக்கிறது. இந்திய மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்காமல், இந்திய அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு பணம் தராமல், நடக்கும் தேர்தலை நாடு விரைவில் சந்திக்கத்தான் போகிறது. நம்பிக்கை தானேங்க வாழ்க்கை. அதனால் நாமும் நம்புவோம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu