தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் வெள்ளத் தடுப்பு ஆலோசனை..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான கூட்டம்
வரவிருக்கும் வடகிழக்கு பருவமழைக்கான தயார்நிலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மாநகராட்சியின் தயார்நிலை
சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன் கூறுகையில், "சென்னை மையப்பகுதியில் வெள்ள நீர் தேங்காமல் இருக்க புதிய வடிகால் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு வெள்ள பாதிப்பு குறையும் என நம்புகிறோம்."
சென்னை மையப்பகுதியில் உள்ள முக்கிய வெள்ள பாதிப்பு பகுதிகளான தி.நகர், கோடம்பாக்கம், எழும்பூர் ஆகிய இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இங்கு புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிக தங்குமிடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. சென்னை மையப்பகுதியில் 50 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
பொதுமக்களுக்கான அறிவுரைகள்
வெள்ள அபாய பகுதிகளில் வசிப்போர் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையான பொருட்களை முன்கூட்டியே சேமித்து வைக்க வேண்டும்.
மாணவர்களுக்கான பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கனமழை பெய்யும் நாட்களில் பள்ளிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசரகால சேவைகள்
தேசிய பேரிடர் மீட்புப் படையின் 4 குழுக்கள் சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் 2 குழுக்கள் சென்னை மையப்பகுதியில் உள்ளன. மின்சாரம், குடிநீர் வழங்கல் போன்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலரின் அறிவுறுத்தல்
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் 14.9.2024 மற்றும் 21.9.2024 ஆகிய நாட்களில் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகராட்சி ஆணையர்களுடன் வடகிழக்கு பருவமழை குறித்த ஆயத்தப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தி சில அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்.
பேரிடர்களை எதிர்கொள்வதில், முன்னெச்சரிக்கைத் தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், நமது அரசு அதற்கு தேவையான உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறது.
பெய்த மழையின் அளவு எவ்வளவு? என்பதை அது பெய்கின்ற நேரத்தில் தெரிந்தால்தான், அணைகளில் நீர் திறப்பு மேலாண்மை,வெள்ள முன்னெச்சரிக்கை தகவல்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நாம் முன்கூட்டியே செய்ய முடியும்.
அதற்காக, நாம் தற்போது 1400 தானியங்கி மழை மானிகளையும், 100 தானியங்கி வானிலை மையங்களையும் நிறுவி நிகழ்நேர தகவல்களை பெற்று வருகிறோம்.
வானிலை முன்னெச்சரிக்கை, தற்போதைய வானிலை நிலவரம் , பெறப்பட்ட மழை அளவு, நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு உள்ளிட்ட விபரங்களை தமிழிலேயே அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு டி.என்.-அலர்ட் என்னும் கைப்பேசி செயலியை உருவாக்கியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
மழைக்காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது மீனவர்கள் தான். ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு புயல்,கன மழை குறித்த தகவல்களை நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலமாக உரியநேரத்தில் கொண்டு சேர்க்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நாட்டிற்கு முன்னுதாரணமாக பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு, வார்டு, தெருவாரியான வெள்ள அபாய எச்சரிக்கை வழங்க சென்னை நிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முதியோர், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி
முதியோர், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்குத் தேவையான உதவிகளை வழங்க முன்கூட்டியே திட்டமிட்டு மாவட்ட நிர்வாகம் செயல்படுவது மிக மிக அவசியமாகிறது.
வெள்ளப் பேரிடர்கள் ஏற்படும் பொழுது தாழ்வான பகுதிகளிலிருந்து முன்கூட்டியே வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது மிக முக்கியம்.
இந்த பணிகளை தமிழ்நாடு அரசின் அனைத்து களப் பணியாளர்களும், பொதுமக்களுடன் இணைந்து அவர்களுக்கு அறிவுறுத்தி வெள்ளத்திற்கு முன்னரே நிவாரண மையங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
அவர்களுக்கு தேவையான தூய்மையான குடிநீர், கழிவறை, தடையற்ற மின்சாரம் உரிய நேரத்தில் உணவு ஆகியவற்றை வழங்க வேண்டும்.
சில இயந்திர முன்னேற்பாடுகள்
வெள்ளம் ஏற்பட்ட உடன் அரசு இயந்திரம் எவ்வளவு விரைவாக செயல்பட வேண்டுமோ அவ்வ ளவு விரைவாகச் செயல்பட வேண்டும். ஓர் உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது என்ற நோக்கத்துடன் செயல்பட வேண்டும்.
அதற்கு தேவையான நீர் இறைக்கும் இயந்திரம், மர அறுப்பான்கள், ஜே.சி.பி., படகுகள் போன்ற கருவிகளை தாழ்வான பகுதிகளுக்கு அருகில் முன்கூட்டியே வைத்திருக்கவேண்டும்.
பல்வேறு வெள்ளத் தடுப்பு பணிகளை, வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்னரே விரைந்து முடிக்க வேண்டும். மாவட்டத்தைப் பற்றி முழுமையாக அறிந்த மூத்த அலுவலர்களை கண்காணிப்பு அலுவலர்களாக நியமித்திருக்கிறோம். அவர்கள் மழைக்கு முன்னதாகவே தங்களது பணிகளை தொடங்கியாக வேண்டும்.
தன்னார்வலர்கள் பங்கு
பேரிடர் மேலாண்மையில், தன்னார்வலர்களது பங்கும் மிகவும் அவசியமானதாகும். எனவே தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தன்னார்வலர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கென முறையான செயல்திட்டத்தினை மாவட்ட நிர்வாகம் உருவாக்க வேண்டும்.
எந்த ஒரு சவாலாக இருந்தாலும், அதில் ஈடுபடும் அனைவரும் ஒருமித்த கருத்தோடு ஓரணியாக நின்று செயல்பட்டால், அதில் வெற்றி என்பது 100 சதவீதம் சாத்தியம்.
பருவமழையினால் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு பொது மக்களின் துயர் துடைக்க அரசு நிர்வாகம் மொத்தமும் ஓரணியாக நின்று செயல்பட்டால் வெற்றி நிச்சயம். இவ்வாறு தலைமைச் செலாளர் முருகானந்தம் அறிவுறுத்தியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu