வடகிழக்கு பருவமழை தீவிரம்: அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
வடகிழக்கு பருவமழை 21.10.2023 அன்று தொடங்கியதிலிருந்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில், 01.10.2023 முதல் 14.11.2023 வரை 221.0 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவைக் காட்டிலும் 17 விழுக்காடு குறைவு ஆகும். வடகிழக்கு பருவமழைக் காலத்தில் 14.11.2023 முடிய, 8 மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவும், 8 மாவட்டங்களில் இயல்பான மழைப்பொழிவும், 22 மாவட்டங்களில் குறைவான மழைப்பொழிவும் ஏற்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழைக்கென மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கடந்த 19.09.2023 அன்று ஆய்வுக் கூட்டம் நடத்தி, அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கும் முதல்வர் அறிவுரை வழங்கினார்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 13.11.2023-ம் நாளிட்ட அறிவிக்கையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை ஏற்பட கூடுமென்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் அறிவுரையின் பேரில் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள 27 மாவட்டங்களில் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு 13.11.2023 அன்று அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 13.11.2023 மற்றும் 14.11.2023 நாட்களில் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், இப்பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், இந்த தகவலை ஆழ்கடலில் உள்ள மீனவர்களுக்கும், கரையில் உள்ள மீனவர்களுக்கும் தெரிவிக்குமாறு மீன்வளத்துறை ஆணையர் மற்றும் கடலோர மாவட்ட ஆட்சியர்கள் வாயிலாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு அமைச்சர்களை அனுப்பி வைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 13 மாவட்டங்களின் நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக தொடர்புடைய மாவட்டங்களுக்கு விரைந்து சென்று முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாநில / மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் முறையே மற்றும் 1077 என்ற கட்டணமில்லா கூடுதலான அலுவலர்களுடனும் இயங்கி தொலைபேசிகளுடனும் வருகின்றன.
பொதுமக்கள், Whatsapp எண்.94458 69848 மூலம் புகார்களை பதிவு செய்யலாம்.
சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்களை காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு கனமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.
மேலும், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்தர் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கனமழை தொடர்பான எச்சரிக்கை குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வின் போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர், கூடுதல் தலைமைச் செயலாளர் / வளர்ச்சி ஆணையர் மற்றும் முதலமைச்சரின் செயலர் எம். முருகானந்தம் மற்றும் பேரிடர் மேலாண்மை இயக்குநர் சி. அ. ராமன் ஆகிய அலுவலர்கள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu