நிலத்துக்குள் செல்ல விவசாயிகளுக்கு தடையாம்: உல்லாச பயணிகளுக்கு அனுமதியாம்..!

நிலத்துக்குள் செல்ல விவசாயிகளுக்கு தடையாம்:  உல்லாச பயணிகளுக்கு அனுமதியாம்..!
X

குரங்கணி மலைப்பகுதி.

குரங்கணி வனப்பகுதியில் தீ பற்றுவதை தடுக்க பட்டா நிலங்களுக்குள் செல்ல தடை விதித்திருப்பது விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குரங்கணி மலைப்பகுதியில் தீ பிடிக்காமல் தடுப்பதற்கு அப்பகுதியில் விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகளை அவர்களது நிலத்திற்கு செல்ல தடை விதித்துவிட்டு, உல்லாசபயணிகளுக்கு காட்டில் கும்மாளமிட அனுமதி அளித்திருப்பது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ராஜசேகர், ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: குரங்கணி டூ முதுவாக்குடி வழியாக டாப் ஸ்டேஷன் வரை செல்லும் மலைச்சாலையில், இந்தக் கோடை காலத்தில் தீப்பிடிக்க வாய்ப்பிருப்பதால், குரங்கணிக்கு சற்று மேலே இருக்கும் வனத்துறைக்கு சொந்தமான தடுப்பு கம்பியை வனத்துறை இழுத்துப் பூட்டி உள்ளது.

கேட்டால், வனப்பகுதியில் தீ பிடிக்க வாய்ப்பு இருப்பதால் இந்த ஏற்பாடு என்பது வனத்துறை அதிகாரிகளின் பதிலாக இருக்கிறது. ஆனால் சட்டவிரோதமாக டாப் ஸ்டேஷனிலிருந்து கூப்பிடு தொலைவில் உள்ள எல்லப்பட்டி உள்பகுதியில், மூணாறைச் சேர்ந்த ஒருவரும், கேரளாவை சேர்ந்த மற்றொருவரும் இணைந்து 8 தற்காலிக கொட்டகைகள் (camp shed) அமைத்து, இன்றும் சுற்றுலா பயணிகளை தங்க வைத்து, அவர்களுக்கு வேண்டியதை, (கவனியுங்கள்... வேண்டிய அத்தனையும்) செய்து கொடுத்து தினசரி லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்கிறார்களே அவர்களால் தீப்பிடிக்காதா...? கொட்டகுடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கொழுக்கு மலையில், 12 க்கும் மேற்பட்ட camp shed ஐ அமைத்து அட்டகாசம் புரிந்து கொண்டிருக்கிறது மலையாள சுற்றுலா மாஃபியா கூட்டம்.

இதெல்லாம் வனத்துறையின் கண்ணுக்கு தெரியவில்லையா...? மனித உயிர்கள் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும்,camp shed க்கு செல்லும் வழியை வனத்துறையினர் பூட்டமாட்டார்களாம். ஆனால் தலைமுறை தலைமுறையாக பட்டா நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகள் செல்லும்,குரங்கணி சாலையை மட்டும் பூட்டுப் போட்டு பூட்டுவார்களாம். மூணாறு, கேரளாவைச் சேர்ந்த இருவர் சட்டவிரோதமாக எல்லப்பட்டி அருகே நடத்தும் campshed ற்கு பல்வகை ரசீது என்கிற பெயரில் ஒரு போலியான சீட்டைக்கொடுத்து, அந்த சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக இருக்கும் பலருக்கும் சிவப்பு கம்பளம் விரிக்கிறது வனத்துறை.

எல்லப்பட்டி வனப்பகுதியில் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு உடந்தையாக இருக்கும் அத்தனை பேரையும் விசாரித்தால், பல பயங்கர, குலை நடுங்க வைக்கும் உண்மைகள் வெளிவரும். இந்த விசாரணை பட்டியலில் வனத்துறை அதிகாரிகளும் உள்ளனர் என்பதை மறந்து விடக்கூடாது. வனத்துறைக்கும், ஒரு பஞ்சாயத்து தலைவருக்கும் வனத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறையை விட, காட்டைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் ஒரு விவசாயி கூடுதல் அக்கறையோடு இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரன் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிடா விட்டால், குரங்கணி வனத்திற்கும் கொடைக்கானல், கோத்தகிரி வனத்தின் நிலை தான் ஏற்படும். குரங்கணி முதல் சென்ட்ரல் ஸ்டேஷன் வரை பட்டா நிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, வனத்துறை மூலம் உரிய அறிவுறுத்தல்களை கொடுத்து, அவர்களுடைய பட்டா இடங்களுக்குச் செல்வதற்கு வழி ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!