பத்திரப்பதிவுக்கு பட்டா பிரதி கேட்க தடை..!

பத்திரப்பதிவுக்கு பட்டா பிரதி கேட்க தடை..!
X

கோப்பு படம் 

பத்திரப்பதிவின் போது தேவையான ஆவணங்களை சார்பதிவாளர்களே வருவாய்த்துறை தகவல் தொகுப்பில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

சொத்து விற்பனை தொடர்பான பத்திரங்கள் பதிவுக்கு தாக்கலாகும் போது, பட்டா, நில வரைபடம் ஆகியவற்றின் காகித பிரதிகளை கேட்க வேண்டாம்' என, சார் பதிவாளர்களுக்கு பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.

தனியார் பெயரில் பட்டா உள்ள சொத்துக்கள் விற்பனைக்கான கிரையப் பத்திரங்கள் பதிவு செய்யப்படும். இதில் கிரையப் பத்திரத்தில் குறிப்பிடப்படும் சொத்தின் உண்மை தன்மையை சரிபார்க்க, பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் கேட்கப்படுகின்றன.

வருவாய் துறையில், இ-சேவை இணையதளத்தில், 'தமிழ் நிலம்' மென்பொருள் வாயிலாக பட்டா பிரதிகள், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இருப்பினும், ஆன்லைன் தொகுப்பில் இருந்து பிரதி எடுத்து, 'அட்டெஸ்டேஷன்' எனப்படும், அங்கீகரிக்கப்பட்ட அரசு அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்று வருமாறு, சார் பதிவாளர்கள் மக்களை வற்புறுத்துகின்றனர்.

இதனால், சொத்து வாங்குவோர் பட்டா பிரதி எடுக்கவும், அதற்கு கையெழுத்து வாங்குவதற்காகவும் அலைய வேண்டியுள்ளது. பட்டா உள்ளிட்ட ஆவணங்கள், ஆன்லைன் முறையில் கிடைக்கும் போது, அதை பிரதி எடுத்து வர சொல்வது தேவையில்லாத வேலை என தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, பதிவுத் துறைக்கு நில அளவை துறை அதிகாரிகள் கடிதம் எழுதினர்.

அதன் அடிப்படையில், பதிவுத் துறை பிறப்பித்துள்ள உத்தரவு: பத்திரங்கள் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் போது, பட்டா, சிட்டா, நில அளவை வரைபடம் போன்றவற்றின் காகித பிரதிகளை கேட்க வேண்டாம். இந்த சொத்துக்களின் சர்வே எண்ணை பயன்படுத்தி, வருவாய்துறையின் தமிழ் நிலம் தகவல் தொகுப்பில் பட்டா விபரங்களை, சார் பதிவாளர்களே சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இது விஷயத்தில் காகித பிரதி கேட்டு, பொது மக்களை அலைக்கழிக்க கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!